நடிகர் ரஜினிகாந்துக்கும், தனக்கும் இடையேயான நட்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து அனைத்து அரசியல், திரைத்துறை, தொழில்துறை என அனைத்து தரப்பு மக்களுடனும் நட்பு பாராட்டுபவர். இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய ரஜினி பற்றி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில் பேசும் அவர், “என்னுடைய மகன் திருமணம் நடந்தபோது நான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு ரஜினிக்கு அழைப்பிதழ் வழங்க வேண்டும் என அவரது உதவியாளருக்கு போன் செய்து விவரத்தை சொல்லி நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டேன். 2 நாட்களை கடந்தும் எனக்கு திரும்ப எந்த பதிலும் வரவில்லை. ஒருநாள் இரவு 10 மணிக்கு ரஜினி வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. மேயரிடம் பேச வேண்டும் என ரஜினி நினைக்கிறார் என சொன்னதும், போனை நான் தான் எடுத்ததால் பேசலாம் என சொன்னேன்.
‘நான் ரஜினி பேசுறேன். நீங்க பத்திரிக்கை கொடுக்க வீட்டுக்கு வர்றதா சொல்லிருந்தீங்களாம். நீங்க வரக்கூடாது’ என சொன்னதும் எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. என்னடா இப்படி சொல்கிறார் என நினைத்தேன். தொடர்ந்து பேசிய அவர், ‘நீங்க தினமும் எத்தனை வேலை செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்க வந்து யாரிடமாவது பத்திரிக்கையை கொடுத்து அனுப்புங்கள்’ என என்னுடைய நேரத்தை வீணாக்க வேண்டாம் என சொன்னேன்.
ஆனால் நானோ, ‘இல்லை சார். நானே வர்றேன்’ என கூறினேன்.
அதற்கு ரஜினி, ‘நீங்கள் வந்தால் நான் கண்டிப்பாக வரமாட்டேன்’ என சொல்லிவிட்டார். அப்படி என்றால் நான் என் மகனிடம் கொடுத்து அனுப்புகிறேன் என சொன்னதும் சரி வர சொல்லுங்கள் என ரஜினி என்னிடம் தெரிவித்தார். திருமணம் நடந்த அன்று எந்திரன் ஷூட்டிங் இருந்தது. அதை கேன்சல் செய்துவிட்டு சரியாக காலை 6 மணி திருமணத்துக்கு வந்துவிட்டார். அந்த அளவுக்கு ரஜினி மிகவும் நட்புக்குரியவர்.
அதேபோல், ‘மறைந்த என்னுடைய இளைய மகன் உடல்நலம் குன்றியிருந்ததால் கிட்டதட்ட 36 வருடம் வீட்டில் வைத்து வளர்த்து வந்தோம். அவன் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். அப்பா,அம்மா என மட்டுமே சொல்லுவான். ரஜினி என்றால் தலையை கோதி காட்டுவார். முத்து,அருணாச்சலம் படம் பார்த்தால் திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் என சொல்லுவான். இதை நான் ரஜினியிடம் சொன்னேன். அப்போது ஒருநாள் யாருக்கும் தெரியாமல் நான் விமான நிலையம் செல்லும்போது கிண்டியில் இருக்கும் உங்க வீட்டுக்கு வந்துட்டு போறேன் என சொன்னார். அந்த மாதிரி நட்புக்குரியவர்” என தெரிவித்துள்ளார்.