நடிப்புத் திறமையைக் காட்ட ரீல்ஸ் வீடியோக்களை அனுப்புவர்களை கடுமையாக விமர்சித்து இயக்குநர் ஜேம்ஸ் வசந்தன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் நன்கு பரீட்சையமாகி சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். முதல் படமே அவரின் அடையாளமாக மாறியது. தொடர்ந்து பசங்க, நாணயம், ஈசன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஒரு வார்த்தை ஒரு லட்சம்” நிகழ்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியால் அவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவானது.

 

இப்படியான ஜேம்ஸ் வசந்தன் அவ்வப்போது சர்ச்சைக்குரிய பதிவுகளை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். ஜேம்ஸ் வசந்தனின் பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இணையவாசிகளிடம் இருந்து வரும். சமீபத்தில் கூட கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய்யிடம், “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரை “தமிழக வெற்றிக் கழகம்” என பெயர் மாற்றம் செய்யுமாறு தெரிவித்தார். அதன்படி பல்வேறு கோரிக்கைகள் வந்தால் கட்சியின் பெயரில் “க்” சேர்த்துக் கொண்டார் விஜய்


இதனிடையே நடிப்புத் திறமையைக் காட்ட ரீல்ஸ் வீடியோக்களை அனுப்புவர்களை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நடிப்புத் திறமையைக் காட்ட காணொலிகளை அனுப்பச் சொன்னால் இப்போது எல்லாரும் அனுப்புவது ஏற்கனவே இருக்கிற படக்காட்சிகளின் ஒலியை வைத்துக்கொண்டு அதற்கு உதட்டசைவு கொடுப்பது.சமூக ஊடகங்களில் உங்கள் முகத்தைப் பிரபலப்படுத்திக்கொள்ள இப்படியெல்லாம் செய்வது ஒன்றும் பிரச்சனையில்லை. இது எப்படி உங்கள் நடிப்புத்திறமையை ஒரு இயக்குனருக்குக் காட்டும்?


 

அந்தக் குரலும் அதிலுள்ள உணர்வுகளும், ஏற்ற இறக்கங்களும் யாருடையதோ. அதை எப்படி உங்கள் திறமையாகக் காட்டமுடியும்? எனக்கு மட்டுமல்ல, இனி யாரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு காணொலிகளை அனுப்பினாலும் இவைகளை அனுப்பாதீர்கள்.



 



வேண்டுமானால், ஒரு காட்சியை எடுத்து அந்த வசனங்களை உங்கள் பாணியில் பேசி நடித்துப் பதிவுசெய்து அனுப்புங்கள். நீங்களே உங்கள் வாய்ப்புகளைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.ஆனால், யாரிடமாவது புதிதாக ஒரு காட்சியைச் சொல்லச்சொல்லி அதற்கு வசனங்கள் எழுதி அதை நடித்து அனுப்புவதே சாலச்சிறந்தது, உங்களுக்கு உண்மையாகவே திறமை இருந்தால்; உங்களுக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால்” என தெரிவித்துள்ளார்.