மீண்டும் ஒருமுறை தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். சமீபத்தில் அவர் இசையமைத்து, பாலிவுட் நடிகை க்ரிதி சானோன் நடித்த `மிம்மி’ திரைப்படம் 64வது கிராமி விருதுகளுக்கான போட்டியில் தேர்வாகியுள்ளது. இந்த நல்ல செய்தியைத் தனது ரசிகர்களுக்கும் பிறருக்கும் தெரிவிக்க ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்திய ஏ.ஆர்.ரகுமான் தனது பதிவில், ``மிம்மி’ படத்திற்கான பின்னணி இசை தற்போது நடைபெறவுள்ள 64வது கிராமி விருதுகள் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களிடம் அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நன்றி’ எனக் கூறியிருந்ததோடு, `மிம்மி’ படத்தின் பின்னணி இசைக்கான லிங்கையும் பதிவு செய்திருந்தார். 


`மிம்மி’ படத்தின் நாயகி க்ரிதி சானோன் ஏ.ஆர்.ரகுமானின் இந்தச் சாதனையைப் பாராட்டி கருத்து பகிர்ந்திருந்தார். கடந்த காலத்தில் ஏ.ஆர்.ரகுமான் அதிகளவில் தேசிய, சர்வதேச சாதனைகளைச் செய்து பல்வேறு விருதுகளைப் பெற்றவர். இதுவரை அவருக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள், பாஃப்டா விருது, கோல்டன் குளோப் விருது ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர, இந்திய அளவில் பல்வேறு உயர்ந்த விருதுகளையும் பெற்றுள்ளார். 



`மிம்மி’ திரைப்படத்தின் இசையைப் பொருத்த வரையில், அதில் வெளியாகிய `பரம சுந்தரி’ பாடல் சமீபத்தில் வெளியான பல பாடல்களை விட மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. `பரம சுந்தரி’ பாடலை ஏ.ஆர்.ரகுமான், ஷ்ரேயா கோஷல் ஆகியோர் பாடியுள்ளனர். `மிம்மி’ படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். லக்‌ஷ்மண் உடேகர் இயக்கத்தில் வெளியான `மிம்மி’ படத்தில் க்ரிதி சானோன், பங்கஜ் திரிபாதி, சாய் தம்ஹான்கர், மனோஜ் பஹ்வா, சுப்ரியா பதக் முதலான நடிகர்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். 






லக்‌ஷ்மண் உடேகர் இயக்கிய `மிம்மி’ பாலிவுட் திரைப்படம், கடந்த 2011ஆம் ஆண்டு மராத்தி மொழியில் சம்ருத்தி போரே இயக்கிய `மாலா ஆய் வாய்சய்’ என்ற பெயரில் வெளியான திரைப்படத்தின் ரீமேக். பாலிவுட்டில் நடிகையாக வேண்டும் என்ற ஆசைகொண்ட இளம்பெண் மிம்மியின் கதையை இந்தப் படம் பேசியுள்ளது. தனது கனவை நிறைவேற்றுவதற்காக பணம் ஈட்டும் முயற்சியில் அமெரிக்கத் தம்பதியினருக்கு வாடகைத் தாயாக ஒப்புக் கொள்ளும் மிம்மியை, அந்தத் தம்பதியினர் கைவிட்டுச் செல்கின்றனர். தனது அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு மிம்மியின் மீது விழுகிறது. இதனைப் பற்றிய கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. கடந்த ஜூலை 26 அன்று, `மிம்மி’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. 



இந்தப் படத்திற்காக நடிகை க்ரிதி சனோன் தனது உடல் எடையில் 15 கிலோ ஏற்றியதும், `பரம சுந்தரி’ பாடலுக்காக உடல் எடையை முழுவதுமாக குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.