இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனி நாடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடிய அமைப்பு எல்.டி.டி.இ. அதன் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு மேதகு என்ற பெயரில் கடந்த 2021ம் ஆண்டு வெப்சீரிசாக வெளியாகியது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


மேதகு இசையமைப்பாளர் உயிரிழந்தது எப்படி?


இந்த தொடரின் இசையமைப்பாளர் பிரவீன்குமார் திடீரென மாரடைப்பால் நேற்று காலாமானார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவருக்கு எப்படி மரணம் ஏற்பட்டது? அவரைப் பற்றியும் இயக்குனர் கிட்டு பேசியுள்ளார்.


இயக்குனர் கிட்டு இதுதொடர்பாக கூறியதாவது, “ இசையமைப்பாளர் பிரவீன்குமாருக்கு சிறுநீரக பிரச்சினை இருந்தது. சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்ததும் அதற்கு ஒரு காரணம். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது 5 நாட்களுக்கு முன்புதான் தெரிந்தது. தேறி வந்துவிடுவார் என்று கருதினோம். ஆனால், கடைசி கட்டம். அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள் என்று கூறிவிட்டனர். அதன் பின்னரே, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். எப்படியாவது அவரை காப்பாற்றிவிட வேண்டும் என்று போராடினோம். ஆனால், முடியவில்லை.


மிக வேதனையாக உள்ளது:


இது மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும் உள்ளது. ஒரு வருடத்திற்கு முன்புதான் பிரவீனுக்கு திருமணம் ஆகியது. அவரோட மனைவி எப்படி இதை எதிர்கொள்வார் என்று தெரியவில்லை. அவரை எப்படி தேற்றுவது என்றும் தெரியவில்லை.


பிரவீன் முறைப்படி இசை கற்றுக்கொள்ளவில்லை. அவரின் தந்தையும், அவரது நண்பர்களும் வைத்திருந்த இசைக்கச்சேரி குழுவைப் பார்த்து இசையில் அவருக்கு ஆர்வம். அவர்களிடம்தான் அவர் பியானோ, ஃப்ளூட் வாசிக்க கற்றுக்கொண்டார். குறும்படம் மூலமாகத்தான் எனக்கு நண்பர் ஆனார்.


ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்:


மேதகு உண்மை சம்பவங்களையும், மக்களின் உரிமைப் போராட்டங்களையம் மையப்படுத்திய கதை. அதற்கான இசை வழக்கமான சினிமா பாணியில் இல்லாமல் மக்களின் வலியை கடத்தக்கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு இசையமைப்பாளராக மட்டுமில்லாமல், அவர்களின் வலியை உள்வாங்கி புரிந்தவராக இருக்க வேண்டும். பிரவீன் தமிழீழ மக்கள் மீது அக்கறை கொண்ட உணர்வாளர்.


மேதகு பண்ணிக்கொண்டிருந்தபோது அவருக்கு சொந்தமாக ஸ்டூடியோ கூட இல்லை. நாங்கள்தான் சிறியதாக இடமொன்றை பண்ணிக் கொடுத்தோம். மேதகுவிற்கு இசையமைச்ச பிறகே சம்பளம் வாங்கினார்.


மேலும் படிக்க: Star - Raja Rani Pandian: ரூ.3500 சம்பளம், நடிப்பு தான் மூச்சு.. ஸ்டார் பட இயக்குநரின் அப்பா “ராஜா ராணி பாண்டியன்” உருக்கம்!


மேலும் படிக்க: Rajinikanth - Ilaiyaraaja: கூலி படத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா.. ரஜினி கொடுத்த “நச்” பதில்!