தனது நடிப்புத் திறமையால் கோலிவுட் தாண்டி மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி ரசிகர்களையும், அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
எப்போதும் பரிச்சார்த்த முயற்சிகளுக்குத் தயங்காத விஜய் சேதுபதி, ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தன் நடிப்பால் தனி முத்திரை பதித்ததைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து முன்னதாக நேரடி தெலுங்கு படங்களான ’சாய் ரா நரசிம்ம ரெட்டி’, ’உப்பன்னா’, மலையாளத்தில் ’மார்கோனி மத்தாய்’ ஆகிய படங்களில் நடித்து அவரது பிற மொழி ரசிகர்களை மகிழ்வித்தார்.
முன்னதாக பான் இந்தியா படமாக உருவான விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்து அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்த விஜய் சேதுபதி, தற்போது மலையாளத்தில் நித்யா மேனனுடன் 19 (1) (a), இந்தியில் கத்ரினா கைஃபுடன் மெர்ரி கிரிஸ்துமஸ் (Merry Christmas) பட்ங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிரிஸ்துமஸ் படத்தின் ஷூட்டிங் தளத்தில் இருந்து நடிகை கத்ரீனா கைஃப் புகைப்படங்கள் பகிர்ந்துள்ளது விஜய் சேதுபதியின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியில் அந்தாதூன், பத்லாபூர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன், இப்படத்தை இயக்கி வரும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி கிரிஸ்துமஸ் நாளில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு கிரிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.