Vijay Sethupathi: மெரி கிறிஸ்துமஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி, ”இந்தியை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, இந்தியை திணிக்காதீர்கள் என்று தான் கூறுகிறோம்” என்றார்.


ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்து உருவாகி இருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப் படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ராதிகா ஆப்தே, ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.  இந்த நிலையில் மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்  நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி, படத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். 



அப்போது பேசிய விஜய் சேதுபதி, “சில நேரங்களில் சில நல்ல விஷயங்கள் நமது வாழ்க்கையில் நடக்கும். அப்படி தான் எனது 96 படத்தை பார்த்து விட்டு இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் கால் செய்து பேசினார். அப்போது ஒரு கதை பற்றி பேசனும் என்றார். மெரி கிறிஸ்துமஸ் கதையை சொல்லும்போது எனக்கு கதை பிடித்து இருந்தது. அப்போது எதுவும் பேசவில்லை. படத்தில் நான் இருக்கேனா, இல்லையா என்ற சந்தேகம் வந்ததால் எனது பிறந்த நாளில்  ஸ்ரீராம் ராகவன் சார்க்கு போன் செய்தேன்.

பேசும்போது எனது பிறந்தநாளில் படத்திற்கான ஒப்பந்தம் போடலாமா என்று கேட்டேன். அப்போது கத்ரீனா கைஃப் நடிப்பது எனக்கு தெரியாது. நடிகருக்கு ஃபுல் ஃப்ரீடம் கொடுத்து வேலையை வாங்குவதில் ஸ்ரீராம் ராகவன் தனிப்பட்டவர். ஒருநாள் கத்ரீனா கைஃபை நேரில் பார்த்தேன், ரொம்ப அழகாக இருந்தார். அவருடன் நடிக்கும்போது எளிமையாக இருந்தது. 2 தசாப்தம் படங்களில் நடித்துவரும் அவருக்கு எந்தவித பெருமையையும் இல்லாமல் நடந்து கொண்டார்.

 

இந்தி பேசுவது குறித்து விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “நான் துபாயில் வேலை பார்த்தபோது இந்தி பேசி இருக்கேன். அது டச் விட்டது. அதுக்கு அப்பறம் 17 வருடங்கள் இந்தி பேசவில்லை. நான் ஃபார்சி வெப்சீரிசில் நடிக்கும்போது கஷ்டமாக இருந்தது. நான் இந்தி பேசுவதை ஆடியன்ஸ் ஏற்றுக்  கொள்வார்கள் என்று நினைக்கவில்லை” என்றார். மேலும், ”இந்தியில் நான் 5 படம் பண்ணிட்டேன். நல்ல டைரக்டர், நல்ல நடிகர்களுடன் வேலை பார்த்துள்ளேன். நல்ல மரியாதை தான் கிடைத்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட படங்கள் எல்லா மொழிகளிலும் வருவதால் தமிழ், இந்தி என்ற வேறுபாடு இல்லை” என்றார்.

 

அப்போது “75 வருடமாக நாம் இந்திக்கு எதிராக, இன்றும் இந்தி தெரியாது போடா என்று டீஷர்ட் போடுகிறோம், இந்தி படிக்கனுமா வேண்டாமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “எதற்கு இந்த கேள்வி? இதை என்னிடம் கேட்டு என்ன ஆகப் போகிறது. முதலில் இந்தி படிக்க வேண்டாம் என்று நானும் சொல்லவில்லை, யாரும் இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்தி படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதை யாரும் தடுக்கவில்லை. இந்தியை திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம்” என்றார்.