Annapoorani Nayanthara : அன்னபூரணி படத்தில் ராமர் இறைச்சி சாப்பிடும் வகையில் தவறான சித்தரிப்பு இருப்பதாக கூறி அப்படக்குழுவினரான நடிகை நயன்தாரா , நடிகர் ஜெய் மற்றும் இயக்குநர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மும்பை காவல்துறையிடம் புகாரளித்துள்ளார் முன்னாள் ஷிவசேனா தலைவர் ரமேஷ் சோலான்கி .


அன்னபூரணி


நடிகை நயன்தாராவின் 75ஆவது திரைப்படமாக உருவான ‘அன்னபூரணி கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி வெளியானது.  அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர்கள் ஜெய், சத்யராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.


தனது சிறிய வயது முதலே ருசியை நுணுக்கமான கண்டறியும் தனித்துவமான திறமையைக் கொண்டிருக்கிறார் அன்னப்பூரணி. உலகளவில் புகழ்பெற்ற செஃப் ஆவதே இவரது கனவு. பாரம்பரியமான பிராமண குடும்பத்தில் பிறக்கும் அன்னபூரணிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது அவர் வளர்ந்த கலாச்சாரம். தன்னுடைய  குடும்பச் சூழலில் இருக்கும் கட்டுப்பாடுகளை கடந்து வெளி உலகின் தான் சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு தனது லட்சியத்தை அன்னபூரணி அடைந்தாரா என்பதே இந்தப் படத்தின் கதை. 


படக்குழுவினர் மீது புகார்


ரசிகர்களை நல்ல விமர்சனங்களைப் பெற்று கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது அன்னப்பூரணி திரைப்படம். இந்நிலையில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அன்னபூரணி படத்தின் மீது புகாரளித்திருப்பதாக தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் ரமேஷ் சொலான்கி.






அன்னபூரணி படத்தை ஆண்டி இந்து படம் என்றும் லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வகையிலான காட்சிகள் இந்தப் படத்தில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.  மேலும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக  ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுகிறார், ஒரு அர்ச்சகரின் பெண்ணான கதாநாயகி நமாஸ் செய்கிறார்.  இப்படியான ஒரு படத்தை திட்டமிட்டே நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.  இந்தப் படத்தின்  இயக்குநர் , மற்றும் இதில் நடித்த நயன்தாரா, ஜெய், மற்றும் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்ட மற்றும் தயாரித்த நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜீஃபைவ் நிறுவனங்களின் மீது வழக்குபதிவு செய்ய மும்பை  காவல்துறையிடம் புகாரளித்துள்ளார் முன்னாள் ஷிவசேனா தலைவர் ரமேஷ் சொலான்கி.