கிறிஸ்தவ மக்களின் மிக முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ‘இயேசு கிறிஸ்து’ அவதரித்த நாளான கிறிஸ்துமஸ் விழா  உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. சினிமாவையும் எந்த மதங்களையும் பிரிக்கவே முடியாது என்ற நிலையில் தமிழ் சினிமாவில் இடம் பெற்ற பிரபலமான கிறிஸ்தவ பாடல்கள் பற்றி காணலாம். 


கண்ணே பாப்பா - சத்திய முத்திரை கட்டளை இட்டது


1969 ஆம் ஆண்டு பி. மாதவன் இயக்கிய கண்ணே பாப்பா படத்தில் முத்துராமன், விஜயகுமாரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் “சத்திய முத்திரை கட்டளை இட்டது” பாடல் இயேசு கிறிஸ்துவை பற்றி எழுதப்பட்டிருந்தது. இப்பாடலில் ‘மேய்ப்பன் அவனே..ஆடுகள் எல்லாம்குழந்தை வடிவத்தில்...மன்னவன் அவனே..மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்’ என்ற வரிகள் மிகவும் பிரபலமானது. இப்பாடலை கண்ணதாசன் எழுதிய நிலையில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். சுசீலா பாடியிருந்தார். 



தவப்புதல்வன் - கிங்கினி கிங்கினி


1972 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, பண்டரி பாய் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “தவப்புதல்வன்”. இப்படத்தில் ‘கிங்கினி கிங்கினி என வரும் மாதாகோவில் மணியோசை’ என்ற பாடல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பின்னணியில் இடம் பெற்றிருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இப்பாடலை கண்ணதாசன் எழுத டி.எம்.சௌந்தர ராஜன் பாடியிருப்பார். 



ஞான ஒளி - தேவனே என்னை பாருங்கள் 


1972 ஆம் ஆண்டு பி. மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், விஜய நிர்மலா, மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘ஞான ஒளி’. இப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் குரலில் இடம் பெற்ற ‘தேவனே என்னை பாருங்கள்.. என் பாவங்கள் தம்மை வாங்கிச் செல்லுங்கள்’ என்ற பாடல் மிக பிரபலமானது. கண்ணதாசன் எழுதிய இப்பாடலுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். 



வெள்ளை ரோஜா - தேவனின் கோயிலிலே 


1983 ஆம் ஆண்டு ஜெகநாதன் இயக்கத்தில்  சிவாஜி கணேசன் , அம்பிகா , பிரபு , ராதா உள்ளிட்டோர் நடித்த படம் ‘வெள்ளை ரோஜா’. இந்த படத்தில் இடம் பெற்றது ‘தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே’ பாடல். வாலி எழுதிய இப்பாடலை மலேசியா வாசுதேவன் பாட இளையராஜா இசையமைத்திருந்தார். 



மணி ஓசை - தேவன் கோவில் மணியோசை


1962 ஆம் ஆண்டு பி.மாதவன் இயக்கிய மணியோசை என்ற படத்தில் கல்யாண் குமார், குமாரி ருக்மணி, எம்.ஆர்.ராதா, விஜயகுமாரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.  விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த இப்படத்தில் இடம் பெற்ற ‘தேவன் கோவில் மணியோசை’ பாடலை சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருந்தார். 



அன்புள்ள ரஜினிகாந்த் - கடவுள் உள்ளமே & தாத்தா தாத்தா


1984 ஆம் ஆண்டு கே.நட்ராஜ் இயக்கத்தில் வெளியான ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் மீனா, அம்பிகா உள்ளிட்ட பலரும் நடிக்க, ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்த இப்படத்தில் ‘கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே’ பாடலும் ‘தாத்தா தாத்தா’ என்னும் பாடலும் இடம் பெற்றிருக்கும். இப்பாடல்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி இடம்பெற்றிருக்கும். 



மின்சார கனவு - அன்பெனும் மழையிலே


1997 ஆம் ஆண்டு மின்சாரகனவு படம் வெளியான நிலையில் இதில்  அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் கன்னியாஸ்திரியாக வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கும் கஜோல் இயேசு பிறப்பை பாடுவது போன்று ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். வைரமுத்து எழுதிய ‘அன்பெனும் மழையிலே’ பாடலை அனுராதா ஸ்ரீராம் பாடியிருப்பார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார். இப்பாடல் இன்றளவும் சினிமா ரசிகர்களால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது இடம் பெறும்.