'தாழ்த்தப்பட்ட மக்கள் ஏமாற்றுகிறார்கள். அவர்களை சினிமாவை விட்டே தூக்க வேண்டும்...' என்று நடிகை மீரா மிதுன் பேசியிருப்பது தமிழகம் முழுவதும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மீரா மிதுன்.. சர்ச்சைகளின் நாயகி. இவர் வாயைத் திறந்தாலே பிரச்சினை தான். தனது நண்பர்கள் தொடங்கி அஜித், விஜய், சூர்யா என அல்டிமேட் ஸ்டார் வரை அவர் பஞ்சாயத்துக்கு இழுக்காத ஆளே இல்லை என்று கூறலாம். வாயை விடுவது பின்னர் வாங்கிக் கட்டுவது என்பது மீரா மிதுனுக்கு நியூ நார்மல்.
இதுவரை அவர் பேசியது எல்லாமே தனிநபர் தாக்குதல் என்றிருந்தன. ஆனால், இப்போது அவர் பேசியிருப்பது சமூகச் சர்ச்சை. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெறுப்புப் பேச்சை நெருப்பாய் உமிழ்ந்திருக்கிறார் மீரா மிதுன். இதனால், அவர் மீது சட்ட நடவடிக்கை பாய அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
அப்படி என்னதான் பேசினார் மீரா?
"பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் வருகிறது. திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எல்லா வேலையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். அவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை" இது தான் மீராவின் பேச்சு. அவர் இதை நான் பேசவில்லை என்றெல்லாம் மழுப்ப முடியாது. ஏனெனில் அவர் பேசிய வீடியோ இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
மீராவின் வாய்க் கொழுப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். @CMOTamilnadu, @mkstalin, @Udhaystalin, @thirumaofficial, @WriterRavikumar, @tnpoliceoffl என்ற பலரையும் டேக் செய்து ட்விட்டர் முழுவதும் மீரா மிதுன் மீது புகார்கள் குவிந்து வருகிறது.
மீரா மிதுன் அவ்வளவு பெரிய திறமைசாலியா?
மீரா மிதுன் அவ்வளவு பெரிய திறமைசாலியா? அப்பேற்பட்ட அழகியா என்றால் இல்லவே இல்லை என்று தான் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் சொல்வார்கள். எட்டுத் தோட்டாக்கள் படத்தில் இவரது சின்ன ரோல் கொஞ்சம் பிரபலம். அதுதவிர சொல்லிக் கொள்ளும் கேரக்டர் சினிமாவில் இல்லை. விஜய் டிவியின் பிக்பாஸ் வளர்த்துவிட்டது என்று கூறலாம். அந்த நிகழ்ச்சியின் மூலம் கொஞ்சம் பிரபலமானார். அப்புறம் செல்ஃப் ஸ்டைல்ட் காட்மேன் போல் தன்னைத் தானே மிகப்பெரிய மாடல் போல் பிரகடனப்படுத்திக் கொண்டு ஏதாவது வாய்க்கு வந்ததைப் பேசி ஊடக வெளிச்சத்தில் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறார்.
அவரின் பேச்சுக்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாலும் பட்டியலின மக்களைப் பற்றி அவர் பேசியிருக்கும் வெறுப்புப் பேச்சு, சாதி பெயரை குறிப்பிட்டுத் திட்டியிருப்பது அருவருப்பின் உச்சம். குறைந்தபட்ச நாகரிகம் கூட தெரியாத மீரா மிதுனை சினிமாவை விட்டே தூக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.