சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, நகரின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியுள்ளது.   






மாணிக்கம் நகர் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.






அசோக் பில்லர் பகுதியில் இரவு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் வெள்ளம் நீர் வெளியேற்ற பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக, சாலைகளில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.










சீதாம்மாள் காலணியில் அமைந்துள்ள முதியோர் நல்வாழ்வு மையத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. நால்புறமும் மழைநீர் சூழ்ந்ததால், அவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த தகவலை பத்தரிகையாளர் மூலம் அறிந்த சென்னை பெருநகர மாநகராட்சி, இரண்டு 100 குதிரை திறன் பம்புகள் மூலம் மழைநீரை முழுமையாக அப்புறப்படுத்தியது. நல்வாழ்வு மையத்தில் உள்ள அனைவருக்கும் தற்போது உணவுகள் சென்றடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






இதற்கிடையே, கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 5 மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை சீரடைந்தது.






தேனாம்பேட்டையில் இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழை நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.


வங்ககடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை மறுநாள் சனிக்கிழமை மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது,மேற்கு-வடமேற்காக நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று அந்த மையம் எச்சரித்தது.