நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் சர்வதேச அளவில் பல நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில், குறிப்பாக தமிழிலும் ஏற்கனவே ஒளிபரப்பாகியுள்ளது. மேற்கண்ட நிகழ்ச்சிகளைப் போலவே, சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சி “மாஸ்டர்செஃப்”. இந்த தொடர் இந்தியில் ஏற்கனவே ஆறு சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது, மாஸ்டர்செப் தொடர் தமிழிலும், தெலுங்கிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடருக்கான முதல் எபிசோட் நேற்று சன் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ நிகழ்ச்சிகள் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் நேற்று முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரை பிரபல நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதைப் போல, தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்குகிறார்.
தமிழில் ஒளிபரப்பாகும் மாஸ்டர்செப் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பாகிய போட்டியில் 12 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல சமையற்கலை நிபுணர்களான ஆர்த்தி சம்பத், ஹரிஷ்ராவ் மற்றும் கவுசிக் ஆகியோர் பங்கேற்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மொத்தம் 30 எபிசோடுகள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் போட்டியின் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட உள்ளனர். குடும்பத்தலைவி, தொழில் முனைவோர். இளைஞர், முதியவர் என்று பல தரப்பினரும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகளை சன்நெக்ஸ்ட் ஆப் மூலமாகவும் கண்டுகளிக்கலாம். இந்த நிகழ்ச்சியை இன்னோவேடிவ் பிலிம் அகாடமியும், என்டோமோல் ஷைன் இந்தியா நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் அனைத்தும் பெங்களூரில் உள்ள பிலிம்சிட்டியில் நடத்தப்பட்டது.