வாட்ஸ் அப்பில் தேவையில்லாத குரூப்களில் சேர்த்து விடப்படுவதை (கோத்து விடப்படுவதை) தடுப்பதற்கு பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே அதனைப் பயன்படுத்தி இனிவரும் காலங்களில் தேவையில்லாத மெசேஜ்கள் வருவதைத் தவிர்க்கலாம்.
உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்திவரும் தகவல் பரிமாற்றச் செயலிதான் வாட்ஸ் அப். தற்போது வாட்ஸ் அப் இல்லாமல் மக்கள் இல்லாத சூழல் இல்லை என்றே கூறலாம். அந்தளவிற்கு மக்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. தனி நபர் அல்லது குழுக்களாக இணைந்து நம்முடைய நண்பர்கள் , உறவினர்கள் மற்றும் அலுவலக ரீதியான உரையாடல்கள் இதன் மூலம் நடைபெற்றுவருகிறது. கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கான லிங்க்குகளும் இதில் தான் அனுப்பப்படுகிறது. இதோடு மட்டுமின்றி ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில், பலரால் பொருட்களை விற்க அல்லது சேவைகளை ஊக்குவிப்பதற்காக பல டன் மக்களை குழுக்களாகச் சேர்ப்பதற்கு இந்த வாட்ஸ் அப் குழுக்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நம்முடைய அனுமதி இல்லாமல் பலர் குழுக்களில் நம்மை இணைத்து விடுவதால், சில நேரங்களில் குழுக்களில் மூலம் வரும் மெசேஜ்கள் பலருக்கு எரிச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. ஒருவேளை நமக்கு இந்த குழுக்கள் பிடிக்கவில்லை என்று இதிலிருந்து வெளியேறினாலும் ஏதாவது நினைத்துவிடுவார்களோ? என்று அதனை செய்வதற்கும் தயக்கம் காட்டுவோம்.
இச்சூழலில் இதுபோன்ற நிலையிலிருந்து தப்பிக்கவும், நமக்கு தெரியாத நபர்கள் நம்மை குழுக்களில் சேர்த்தால் அதனைத் தடுப்பதற்கும் பல்வேறு வசதிகள் வாட்ஸ் அப்பில் இடம் பெற்றுள்ளன. எனவே இதனைப் பயன்படுத்தி, இனி தேவையில்லாத நபர்களின் குழுக்களில் இடம் பெறுவதினைத் தடுக்கலாம்.
தெரியாத நபர்கள் ஆரம்பிக்கும் குழுக்களில் சேர்ப்பதனை தடுக்கும் வழிமுறைகள்:
முதலில் வாட்ஸ்-அப்பைத் திறக்க வேண்டும். பின்னர் திரையின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்யவும்.
பின்னர், settings உள் நுழைந்து அதில் உள்ள அக்கவுன்ட (Account) ஆப்சனைக் கிளிக் செய்ய வேண்டும்.
அதில் பிரைவசி என்பதனை கிளிக் செய்தால், அதில் குரூப்ஸ் என்ற ஒன்று இருக்கும்.
அதனை கிளிக் செய்து உள்ளே நுழையும் பொழுது, Everyone, my contacts, my concepts except என்று இருக்கும்.
இதில் Everyone என்பதில், நம்முடைய மொபைல் எண் யாரிடம் இருந்தாலும் நம்முடைய அனுமதி இல்லாமல் எந்த குரூப்பில் வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ள முடியும்.
my contacts-இல் நாம் மொபைலில் சேமித்து வைத்துள்ள நபர்களைத்தவிர வேறு யாரும், தேவையில்லாமல் எந்த குழுக்களிலும் நம்மை இணைத்துக்கொள்ள முடியாது.
my concepts except-இல் நம்முடைய மொபைல் கான்டக்டில் அவர் இருந்தாலும், ஒருவரை வேண்டாம் என்று நினைத்தால் அவரின் மொபைல் நம்பரை கிளிக் செய்துகொள்ள வேண்டும்.
எனவே நமக்கு எது தேவையோ அதனை கிளிக் செய்துக்கொள்ளலாம். இதுபோன்ற வழிமுறையை நம்முடைய வாட்ஸ் அப்பில் பயன்படுத்தினாலே தேவையில்லாத குழுக்களில் நாம் சேர்க்கப்படுவதைத் தடுக்க முடியும்.