இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையேயான நாட்டிங்காமில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய கே.எல்.ராகுலின் சிறப்பான ஆட்டத்தாலும், ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் 278 ரன்களை குவித்தது.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் தொடக்கம் முதல் தொடர்ந்து சீரான இடைவெளியில் விழுந்து வந்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டும் தனி ஆளாக போராடினார். ஜானி பார்ஸ்டோ 30 ரன்களையும், சாம் கரன் 32 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கேப்டன் ஜோ ரூட் மட்டும் 109 ரன்களை குவித்து இங்கிலாந்து அணி 300 ரன்களை கடக்க உதவினார். இறுதியில் இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்துவீசி 64 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, இந்திய அணி 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியுள்ளது. நான்காவது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 52 ரன்களுக்கு ஒரு விக்கெட்டுகளை இழந்திருந்தது. முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் 38 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 26 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 12 ரன்களுடனும், சத்தீஸ்வர் புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 157 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன.
மைதானத்தில் மழையில்லாமல் நன்கு வெயில் அடித்தால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டால் ஆடுகளம் பந்துகள் ஸ்விங் ஆவதற்கு நன்கு ஒத்துழைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் ட்ரென்ட் பிரிட்ஜில் மழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இன்று காலையும் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று ஏற்கனவே அந்த நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ட்ரென்ட் பிரிட்ஜில் காலையில் மழை பெய்த காரணமாக ஆட்டம் இன்று தொடங்கப்படுவது தாமதமாகியுள்ளது.
நடந்து முடிந்த மூன்று இன்னிங்ஸ்களிலும் வேகப்பந்து வீச்சாளர்களே இந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தினர். ட்ரென்ட்ப்ரிட்ஜ் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளிலே அதிகபட்சமாக 2004-ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 284 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்துள்ளது. இந்த மைதானத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் 14 ஆட்டங்களில் முன்பு ஆடியுள்ளது. இதில், இந்திய அணி 4 ஆட்டங்களிலும், இங்கிலாந்து அணி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 6 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளது.