தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடன அமைப்பாளர்களில் சிவசங்கர் மாஸ்டரும் ஒருவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 800க்கும் அதிகமான படங்களுக்கு நடன காட்சிகள் அமைத்தவர்.
குறிப்பாக தமிழ் சினிமாவில் பல பெரிய ஹீரோக்களை ஆட்டுவித்தவர் சிவசங்கர் மாஸ்டர். அஜித்திற்கு நடனம் பெரிதாக வராது என விமர்சனங்கள் எழுந்த காலக்கட்டத்தில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த வரலாறு படத்திற்கு சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைத்தார்.
சமீபத்தில் சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது சிகிச்சைக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் உதவி புரிந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இந்நிலையில் வரலாறு படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சிவசங்கர் மாஸ்டர் குறித்து கூறுகையில், “வரலாறு’ படத்தில் பணியாற்றுவதற்கு நீண்ட காலம் முன்பே எனக்கு சிவசங்கர் மாஸ்டரை நன்றாக தெரியும். நாங்கள் படத்தைத் தொடங்கியபோது, தனது கதாபாத்திரம் தவறாகப் புரிந்து கொள்ளப்படுமோ என்ற ஒரு தயக்கம் அஜித்துக்கு இருந்தது. நான் சிவசங்கர் மாஸ்டர் குறித்து அஜித்திடம் எடுத்து சொல்லி அவரை ஊக்கப்படுத்தினேன்.
‘படத்தில் உங்கள் கதாபாத்திரம் போலவே நிஜ வாழ்வில் சிவசங்கர் மாஸ்டருக்கு இரண்டு மகன்கள் உண்டு. ஆனால், அவரது உடல் மொழியில் மட்டுமே சிறிது பெண் தன்மை இருக்கும். அவர் தன்னுடைய கலை வடிவத்தை தன்னுடைய உடலில் ஏற்றுக் கொண்டதே அதற்குக் காரணம். அவர் வணக்கம் சொல்வது, திட்டுவது, வெற்றிலை போடுவது என அனைத்திலும் ஒரு பெண் தன்மை இருக்கும். யாரும் அதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை’ என்று அஜித்திடம் கூறினேன்.
மாஸ்டர் மீதான அன்பே அப்படத்தில் அஜித்துக்கு ‘சிவசங்கர்’ என பெயர் வைக்கக் காரணமாய் அமைந்தது. மாஸ்டர் எப்போதும் ஜவ்வாது பூசிக் கொள்வார். அவர் ஒவ்வொரு முறையும் என் அலுவலகத்துக்கு வரும்போது, ஒட்டுமொத்த இடமும் மணம் கமழும்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: IT Raids Saravana Store: சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரிசோதனை.. பல குழுக்களாக பிரிந்து ரெய்டு!
AIADMK Executive Meeting LIVE: அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது