இந்தியாவில் ஆண்டுதோறும் டி20 போட்டிகளுக்கான ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐ.பி.எல். தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் தெரிவித்திருந்தது.
அதன்படி, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நேற்று அறிவித்தது.
ஒவ்வொரு அணியும் அணி விவரங்களை வெளியிட்டுள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி, மயாங்க் அகர்வால் மற்றும் ஹர்ஷதீப் சிங் ஆகியோரை தக்க வைத்திருப்பதாக அறிவித்தது. இதனால், பஞ்சாப் அணியில் இருந்து முக்கிய வீரர்களான ராகுல், ரவி பிஸ்னோய், நிக்கோல்ஸ் பூரன் ஆகியோர் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனர் கும்ப்ளே, “கடைசி நான்கு ஆண்டுகால ஐபிஎல் தொடர்களில் ராகுல் பஞ்சாப் அணியின் முக்கிய வீரராக இருந்திருக்கிறார். கண்டிப்பாக ராகுலை தக்கவைத்து கொள்ள வேண்டும் என திட்டமிட்டிருந்தோம். அதனால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரை கேப்டனாக தேர்வு செய்தோம். ஆனால், ஏலத்தில் பங்கு பெற அவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம், அதை ஏற்கிறோம். அதனால், தக்க வைக்கவில்லை. புதிய அணியை கட்டமைக்க திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்திருக்கிறார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்