தமிழ்நாடு முழுவதும் நகராட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் அதற்கான முன்னெச்சரிக்கையாக அந்த மாவட்டத்திலேயே நகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அனைத்து கட்சி களிலும் தேர்தலில் போட்டியிட சீட்டு வேண்டும் என்று கேட்டு மோதலில் ஈடுபட்டதைத்தான் இதுவரைக்கு கேள்விப்பட்டிருக்கோம் மற்றும் பார்த்துள்ளோம். தற்போது , திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சித் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அதிமுக நிர்வாகிகள் நழுவி வருவது அந்த கட்சிக்குள் புது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை நகராட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும், முன்னாள் வேளாண் துறை அமைச்சரும் தற்போது போளூர் சட்டமன்ற உறுப்பினரூமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. தென்றல் நகர்பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்புமனு வழங்குதல் மற்றும் வேட்பு மனுக்களை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகராட்சியின் அதிமுக முக்கிய புள்ளகள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நகராட்சி வார்டுகளுக்கு யாரை எல்லாம் நிறுத்தலாம் என்று பேச்சு வார்த்தை நடைப்பெற்றது. அதில் பெரும்பாலான வார்டுகளில் போட்டியிடுவதற்கு யாரும் முன்வரலை. தற்போது ஒரு சில வார்டுகளை பெண்களுக்கு திமுக அரசு ஒதுக்கியுள்ளது. இப்போது நம்முடைய சூழ்நிலை சரியில்லை என்று பலரும் பல காரணங்களை அடுக்கியுள்ளனர். இதனால் அதிமுக கட்சி அலுவலகத்தில் பெரும் சலசலப்பு நடைப்பெற்றுள்ளது.
இது குறித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலரிடம் பேசுகையில்;
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நகராட்சி தேர்தல் வேட்பு மனு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதற்கு சென்றோம். இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி வார்டுகளில் தேர்தலில் போட்டியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடைப்பெற்றது அதில் நாங்கள் போட்டியிடவில்லை என்று அனைவரும் ஒதுங்கி விட்டனர். இதனால் எங்களுடைய முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிர்ச்சி அடைந்து மற்றும் நொந்துபோனார். உடனடியாக அவர் கோவத்தில் எழுந்து நகராட்சி தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்று கேள்வி கேட்டார். இதனைக்கேட்ட அனைத்து நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக ஒதுங்கிக்கொண்டனர். அதோடுமட்டும் இல்லாமல் , அங்கு இருந்த நிர்வாகிகள், நகர நிர்வாகியா கடந்த 10 வருடங்களுக்கு மேல் பதவி சுகத்தை அனுபவித்து மட்டும் இல்லாமல் பணத்தை குவித்த நபர் போட்டியிடட்டும் என்று நிர்வாகி ஒருவரை கை நீட்டியுள்ளனர்.
இதனால் பதற்றம் அடைந்த அந்த நிர்வாகி, ''என்னோட வார்டு பெண்களுக்கு ஒதுக்கி விட்டாங்க''என்று கூறு அமைதியாக நழுவி விட்டார். உடனே கூட்டத்தில் அதிக சத்தத்துடன் ஒரு குரல் குறுக்கிட்டது அது மாவட்ட நிர்வாகி ஒருத்தர், அப்போது அந்த நிர்வாகி, அப்படியானால் அவருடைய மனைவியை தேர்தலில் நிறுத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த நகர நிர்வாகி, டேபிள் மீதிருந்த தண்ணீர் பாட்டிலை கோவத்துடன் எடுத்து வீசினார். அதனைத்தொடர்ந்து , கூட்டத்தில் மோதல் வெடித்தது. அதுமட்டுமின்றி, எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் இருந்த அந்த நிர்வாகி, இதுதான் நமக்கு கிடைத்த சாக்கு என்று அங்கிருந்து கிடுகிடுவென்று நடையை காட்டினார்.
நகராட்சி தேர்தல் அறிவிப்பு வந்ததும், நான் நீ என்று அனைத்து நிர்வாகிகளும் சீட்டு கேட்டு ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டும் தகராறு பண்ணும் நிலைமை மாறி, தற்போது சீட்டு வேண்டாம் என்று தகராறு பண்ணும் நிலைமைக்கு கட்சி போய்விட்டது என்று அதிமுக கட்சி தொண்டர்கள் புலம்புகின்றனர் என்றார். தற்போது திருவண்ணாமலை அதிமுகவின் நிலைமை நடுக்கடலில் மாலுமி இல்லாமல் நிற்கும் கப்பல் போன்று உள்ளது.