தமிழ் ராக்கர்ஸ் என்ற பைரசி இணையதளம் உருவான 2011ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் பைரசிக்கு எதிரான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பைரசிக்கு எதிரான நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை தொடர்ந்து தமிழ்ராக்கர்ஸ் தளத்தை ட்ராக் செய்ததில், கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் முதல் அந்தத் தளம் முழுவதுமாக முடங்கியுள்ளது. தொடர்ந்து, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இணைந்து பைரசிக்கு எதிராக பணியாற்றி வருகின்றனர். 


மாஸ்பங்க் ஆண்டி பைரசி என்ற நிறுவனத்தின் இயக்குநர் சரத் குமார், `பைரசி என்பது சாதாரண தவறாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அது கடுமையான குற்றமாகக் கருதப்பட வேண்டும். பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் முதலீடு செய்யப்படும் பல கோடி ரூபாய் வியாபாரத்தை இது பாதிக்கிறது’ எனக் கூறியுள்ளார். இந்த நிறுவனம் தமிழ் சினிமாவில் பைரசி விவகாரங்களை முன்வைத்து பணியாற்றி வருகிறது. 



`கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் படிப்பை முடித்தவுடன், சினிமாவில் இயக்குநராக விரும்பினேன். அப்போது, பைரசியை அதன் அடிப்படையில் இருந்தே நீக்க வேண்டும் என சில ஐடியாக்களை உருவாக்கினோம். எங்கள் நோக்கம் ஒரு தயாரிப்பாளரின் படைப்புகளை மட்டும் பாதுகாப்பதாக இல்லாஅல், பைரசியை மேற்கொள்ளும் நபர்களையும் பிடிப்பதாக இருந்தது’ எனக் கூறுகிறார் சரத் குமார். 


சரத் குமார் தனது குழுவினருடன் நடிகர் விஷாலை 2017ஆம் ஆண்டு சந்தித்துள்ளார். அப்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் விஷாலும், பொருளாளராக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபும் இந்தக் குழுவினருடன் உரையாடியதோடு, தயாரிப்பாளர் சங்கத்தின் அதிகாரப்பூர்வமாக பைரசி எதிர்ப்பு அணியாகவும் இந்தக் குழு நியமிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அணி தனியாக நிறுவனம் தொடங்கி, தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. 


மாஸ்பங்க் ஆண்டி பைரசி நிறுவனம் இதுவரை 190 திரைப்படங்களுக்கு அதிகமாக பணியாற்றியுள்ளது. அவற்றுள் பாகுபலி 2, கே.ஜி.எஃப், 96, விஸ்வரூபம் 2, தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரம் வேதா, மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியதோடு, மொத்தமாக சுமார் 95 சதவிகித பைரசியையும் ஒழித்துள்ளது இந்த நிறுவனம். 



திரையரங்குகளில் ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்டு பைரசி செய்யப்படும் திரைப்படங்களையும், தற்போது ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் திரைப்படங்களையும் பைரசியில் இருந்து பாதுகாக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. `பைரசியை வெறும் ஒரு திரைப்படத்தின் லிங்கை முடக்குவதோடு நிறுத்திவிட முடியாது என்பதால், அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் இணையதளங்களின் விவரங்கள், அவர்கள் இயங்கும் விதம், டெலிகிராம் செயலியில் பகிரப்படும் திரைப்படைப்புகள் ஆகியவை மீது தொடர்ந்து செயலாற்றுகிறோம். வெளியாகும் திரைப்படங்களின் பைரேட்டட் வடிவங்களை முதலிலேயே முடக்குவதில் ஈடுபடுகிறோம். டவுன்லோட் செய்யப்படும் டாரண்ட் ஃபைல்களை மெதுவாக மாற்றுவது, அவற்றைக் கண்காணிப்பது, இணையதளத்தில் இருந்து அந்த லிங்கை நீக்குவது எனப் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறோம்’ என்கிறார் சரத் குமார். 


திரைப்படங்களை பைரசியில் இருந்து பாதுகாக்க தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள், ஓடிடி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பேசி வருகிறோம். `திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் திரையரங்களில் சிசிடிவி கேமரா பொருத்த அறிவுறுத்தியுள்ளோம். ஓடிடி நிறுவனங்கள் பெரும்பாலும் வட இந்திய பைரசி எதிர்ப்பு நிறுவனங்களுடன் பணியாற்றுகின்றனர்’ என்று கூறும் சரத் குமார், `தமிழின் பழைய பாடலான `திருடனைப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்பதைப் போல, பைரசி எதிர்ப்பு நிறுவனங்கள் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும், மக்கள் அனைவரும் பைரசியை முறையிட்டால் மட்டுமே அதனை ஒழிக்க முடியும்’ எனக் கூறுகிறார்.