பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் - பார்வதி திருவோத்து நடிப்பில் உருவான ‘மரியான்’ திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு  ஜூலை 19ஆம் தேதி வெளியானது. நெற்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது மரியான். அதனைக் கொண்டாடும் விதமாக தனுஷ், ஏ,ஆர்,,ரஹ்மான், பார்வதி மற்றும் படத்தின் இயக்குநரான பரத்பாலா வீடியோ காலில் படம் குறித்தான தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.


மரியான் குறித்து படத்தின் இயக்குநர் பரத்பாலா


பத்து ஆண்டுகளுக்குப் பிறகு படத்தை நினைவுகூர்ந்த படத்தின் இயக்குநர் பரத்பாலா பேசியதாவது: “இன்று மரியான் படத்தை நினைத்துப் பார்க்கும்போது எனக்கு முதலில் நினைவுக்கு வருவது மரியான் மற்றும் பனிமலர் ஆகிய இரு கதாபாத்திரங்களுக்கு இடையிலான காதல்தான்.


இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் தொலைபேசியில் மெளனமாக நிற்கும் அந்த ஒரு காட்சி ஒட்டுமொத்த  படத்தையும் விளக்கிவிடும். தனுஷ் நீங்கள் இதுமாதிரியான காதல் கதைகளில் நிறைய நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்” என்று அவர் கூறினார்.






 


ஏ.ஆர்.ரஹ்மான் இசை


மரியான் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த அனைத்துப் பாடல்களும் ரசிக்ரகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தமிழில் மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தில் இணைந்து வேலை செய்ததை தான் மிகவும் விரும்பியதாக கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும் படத்தின் இடம்பெற்ற ‘நேற்று அவள் இருந்தாள்’ பாடலை விஜய் பிரகாஷ் அனைவருக்காகவும் பாடிக் காண்பித்தார்.


தனுஷ்


மரியான் திரைப்படம் தனுஷுக்கு மிகமும் கடினமான ஒரு படமாக இருந்தது.  அத்தனை சவால்களையும் ஏற்று தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் தனுஷ். குறிப்பாக கடலுக்கு அடியில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்காக அதிக சிரத்தை எடுத்துக்கொண்டார் தனுஷ். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன் தனக்கு எது எல்லாம் சிரமமாக இருந்ததோ, அதெல்லாம் இப்போது தனக்கு பழகிவிட்டதாக தெரிவித்தார் தனுஷ்.


அடுத்த டார்ச்சருக்கு தயாரா தனுஷ்


இந்த சந்திப்பில் இயக்குநர் பரத்பாலா தனுஷிடம் தான் அவரை நிறையவே டார்ச்சர் செய்துவிட்டதாகக் கூறினார். தொடர்ந்து அடுத்த டார்ச்சருக்கு தனுஷ் தயாராக இருக்கிறாரா என்றும் கேட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்  தனுஷுடன் இணைந்து பரத்பாலா படம் இயக்கப்போகிறாரா என்கிற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணி மீண்டும் இணைவதை ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.