உலகிற்கு வரும் ஆபத்துகளை சூப்பர் ஹீரோக்களை கொண்டு  தடுப்பதை மட்டுமே,  முக்கிய கதைக்களமாக கொண்டு மார்வெல் நிறுவனம் தனக்கென ஒரு தனி திரையுலகை கட்டமைத்துள்ளது. உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்நிறுவனத்தின் படங்கள், சர்வ சாதாரணமாக சில ஆயிரம் கோடிகளை வசூலாக குவித்து வருகின்றன. மார்வெல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் ரூ.22 ஆயிரம் கோடியை வசூலித்து, அவதாரை அடுத்து உலக அளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் எனும் பெருமையையும் பெற்றது.  


டிராகுலாவை வேட்டையாடும் பிளேட்:


தானோஷின் மரணத்துடன் மல்டிவெர்ஸ் சாகா நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக மல்டிவெர்ஸ் சாகா எனும் பெயரில் புதிய படங்கள் வெளியாகும் என, 2019ம் ஆண்டு சாண்டியாகோ காமிகான் நிகழ்ச்சியில் மார்வெல் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, டிராகுலாவை வேட்டையாடும் ஆர்-ரேடட் கதாபாத்திரத்தமான பிளேட் மார்வெல் திரையுலகில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன் முதன்மை கதாபாத்திரத்தில் ஆஸ்கர் விருது வென்ற மஹெர்ஷலா அலி நடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டதும், பிளேட் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. 


பிளேட் படத்திற்கான இயக்குனராக Bassam Tariq  நியமிக்கப்பட்டு பணிகள் துரித கதியில் நடைபெற்று வந்தது. வரும் டிசம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், சில காரணங்களால் பிளேட் படத்தில் இருந்து விளங்குவதாக இயக்குனர் தெரிவித்தார். அதோடு, படத்தின் கதைகள் சில பக்கங்களில் மட்டுமே இருப்பதாக, மஹெர்ஷலா அலி வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து, பிளேட் படத்திற்கு புதிய இயக்குனரை தேடும் பணியில் மார்வெல் நிறுவனம் ஈடுபட்டது.




                           இயக்குனர் யான் டிமாங்கே (courtesy: The Hollywood Reporter)


புதிய இயக்குனர்:


இந்நிலையில், HBO மேக்‌ஷில் லவ் கிராஃப்ட் எனும் ஹாரர் தொடரை இயக்கிய, பிரான்சை சேர்ந்த Yann Demange-வை,  பிளேட் திரைப்படத்தின் இயக்குனராக மார்வெல் நிறுவனம் நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, பிளேட் திரைப்படத்திற்கு புதிய கதாசிரியராக,  எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளரான Michael Starrbury இணைந்துள்ளார். மார்வெலின் முந்தைய படங்களின் டோனில் இல்லாமல், சற்று கூடுதல் ஹாரர் தன்மையுடன் பிளேட் படத்திற்கான கதையை எழுதும் பணியில் புதிய குழு களமிறங்கியுள்ளது.


வரும் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி பிளேட் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அட்லாண்டாவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  நீண்ட இழுபறிக்கு பிறகு பிளேட் படத்திற்கான பணிகள் மீண்டும் முழுவீச்சில் தொடங்கியுள்ளதால், மார்வெல் மற்றும் ஹாரர் திரைப்பட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.