மார்ட்டின் ஸ்கார்செஸி


சமீபத்தில் மார்ட்டின் ஸ்கார்செஸி (Martin Scorsese) இயக்கத்தில் வெளியான 'கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்' திரைப்படம் உலக அளவில் பாராட்டுக்களைப் பெற்றது.  81 வயதை எட்டியிருக்கும் மார்ட்டின் ஸ்கார்செஸி தன்னுடைய கதை சொல்லும் திறனால் உலகைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார். தமிழில் இன்று பல திரைப்படங்கள் மார்ட்டின் ஸ்கார்செஸி படத்தின் ஒரு காட்சியையாவது நினைவுபடுத்தாமல் இருக்காது.




ஹாலிவுட்டில் கிட்டத்தட்ட 25  திரைப்படங்கள், 16 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார் மார்ட்டின். அதிகமான முறை ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் மார்டினும் ஒருவர். கிட்டத்தட்ட 10 முறை சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகி உள்ளார். இதில் 2007ஆம் ஆண்டு தி டிபார்டட் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். ஷட்டர் ஐலண்ட்,  வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட், ரேஜிங் புல், போஸ்ட், என இவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் இயக்குநராக விரும்புபவர்கள் பாடமாக எடுத்துக்கொள்ளும் படைப்புகள்.


முதல் படம்




திரைப்பட மாணவனாக இருக்கும்போது தன்னுடைய முதல் குறும்படமான ‘பிக் ஷேவ்’ என்கிற படத்தை இயக்கினார் மார்ட்டின். வியட்னாம் போரில் அமெரிக்காவின் பங்கை விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்த இந்தப் படம், பரவலான அங்கீகாரத்தைப் பெற்றது.  நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த மார்ட்டின் ஸ்கார்செஸி  நியூயார்க்கின் கேங்ஸ்டர் கலாச்சாரத்தை தன்னுடையப் படங்களில் காட்டினார்.  திரைக்கதை எழுத்தாளர் பால் ஷ்ரேடர் எழுதி மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் வெளியான ‘டாக்ஸி டிரைவர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த ராபர் டி நிரோவின் வசனம் இன்றுவரை புகழ்பெற்றதாக இருக்கிறது. 


 


ஷட்டர் ஐலண்ட்,  வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட், ரேஜிங் புல்,  தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிரைஸ்ட் என பல்வேறு ஜானர் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் மார்ட்டின் ஸ்கார்செஸி.  


தொடர்ச்சியாக சினிமா மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் மார்ட்டின் ஸ்கார்செஸி சமகால சினிமாவின் போக்கை கவனித்தும் வருகிறார். சமகாலத் திரைப்படங்களை புகழ்ந்தும் அதில் இருக்கும் குறைகளையும் தொடர்ச்சியாக விமர்சித்தும் வருகிறார்.




இந்தியச் சூழலில் குறிப்பாக தமிழ் சூழலில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிறந்த இயக்குநர்களாக கருதப்பட்டவர்கள் அவர்களின் முதுமைக் காலத்தில் கிட்டத்தட்ட காணாமல் போய்விடுகிறார்கள். அப்படி ஒருவேளை இயக்கினாலும் பெரும்பாலானவர்களின் படைப்புகள் வடிவ ரீதியாக பின்தங்கியே இருக்கிறது. அல்லது இவர்களின் சிந்தனைகள் காலத்தைக் கடந்த ஒன்றாக இருப்பதில்லை. இப்படியான ஒரு சூழலில் தன்னுடைய 81ஆவது வயதில் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பாடம் கற்பிக்கும் வகையில் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் மார்ட்டில் ஸ்கார்செஸி. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




மேலும் படிக்க : Killers Of The Flower Moon Review: கருப்புத் தங்கத்துக்காக நிகழ்ந்த கொடூரங்கள்.. ‘கில்லர்ஸ் ஆப் தி ஃப்ளவர் மூன்’ பட விமர்சனம்!