நடிகர் விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

Continues below advertisement


மார்க் ஆண்டனியாக விஷால் 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஷால் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி ஆகிய படங்கள் சரியாக போகவில்லை. இதனால் தனது அடுத்தடுத்த படங்களை கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில்  த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக “மார்க் ஆண்டனி” படத்தை இயக்கி வருகிறார்.


இந்த படத்தில் ஹீரோவாக விஷாலும், ஹீரோயினாக ரித்து வர்மாவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல்  தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு கடந்தாண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியானது. தாடியும், கையில் துப்பாக்கியுமாக விஷால் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. 


ஷூட்டிங்கில் நடந்த விபத்து


முன்னதாக இப்படத்தின் ஷூட்டிங்கின் போது விபத்து நிகழ்ந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டூடியோவில் கடந்த பிப்ரவரி மாதம் ஷூட்டிங் நடந்தது. அப்போது ஆக்‌ஷன் காட்சி ஒன்றில் பயன்படுத்திய லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து செட்டில் மோதியது. இந்த காட்சிக்காக  ஏராளமான துணை நடிகர்கள், பணியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கூடியிருந்த நிலையில் இந்த விபத்து நடந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


இந்த விபத்தில் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த விபத்திலிருந்து நூலிழையில் தப்பியதாக விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவருமே ட்விட்டரில் தெரிவித்ததோடு, கடவுளுக்கு நன்றி எனவும் கூறியிருந்தனர். 


மார்க் ஆண்டனி பட டீசர்  


இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. போன் வழியாக காலத்தை கடத்தும் டைம் டிராவல் நிகழ்வுகள் இதில் கதையாக அமைக்கப்பட்டுள்ளது என்பது டீசரில் வெளியான காட்சிகள் மூலம் தெரிய வருகிறது. முன்னதாக இன்று காலை நடிகர் விஷால், மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் வினோத் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் நடிகர் விஜய்யை சந்தித்தனர். அவரிடம் மார்க் ஆண்டனி படத்தின் டீசரை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதனையடுத்து “தளபதி விஜய் ஃபார் மார்க் ஆண்டனி” என்ற ஹேஸ்டேக் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.