நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வரும் மார்க் ஆண்டனி ஷூட்டிங்கின்போது விபத்து நிகழ்ந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மார்க் ஆண்டனி:


 த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, சிம்புவின் அன்பானவன் அசராதவன்  அடங்காதவன், பிரபுதேவா நடித்த பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது அடுத்த படமாக விஷால், எஸ்.ஜே.சூர்யா. ரித்து வர்மா ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் படம்  மார்க் ஆண்டனி.


இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் ஷூட்டிங்கின் போது விபத்து நிகழ்ந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டூடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், பட ஷூட்டிங் சமயத்தில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


ஏராளமான துணை நடிகர்கள், பணியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்குபெற்ற இந்த ஷூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்ட இந்தக் காட்சிகள் கோலிவுட் வட்டாரத்தி பரபரப்பை ஏற்படுத்தி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.


 






இந்த விபத்தில் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறால் லாரி நிற்காமல் ஓடியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்திலிருந்து நூலிழையில் தப்பியது குறித்து முன்னதாக விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவருமே பதிவிட்டுள்ளனர். 


உயிர் தப்பிய விஷால்:


நடிகர் விஷால் தனது பதிவில், “வெகு சில நொடிகள் மற்றும் சில அங்குலங்களில் உயிர் தப்பினேன், எல்லாம் வல்ல கடவுளுக்கு நன்றி. தற்போது மீண்டும் ஷூட்டிங் திரும்பியுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.


மேலும் இந்த விபத்து குறித்துப் பதிவிட்டுள்ள நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “ஆண்டவனுக்கு மிக மிக நன்றி, நூலிழையில் உயிர் தப்பினோம். தற்செயலாக, நேராக செல்வதற்கு பதிலாக, லாரி குறுக்கே சென்றுவிட்டது. அது நேராக வந்திருந்தால் நாங்கள் இருவரும் இப்போது உயிரோடு இருந்து ட்வீட் செய்திருக்க மாட்டோம். கடவுளுக்கு நன்றி, நாங்கள் அனைவரும் தப்பித்துவிட்டோம்” எனப் பதிவிட்டுள்ளார்.


 






முன்னதாக மஹா சிவராத்திரி வாழ்த்து தெரிவித்து விஷால் பகிர்ந்த இந்தப் படத்தின் போஸ்டர் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.