தமிழ் திரையுலகில் காமெடியில் முடிசூடா மன்னனாக விளங்கும் வடிவேலு சில பல காரணங்களால் சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் விலகி இருந்தார். திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் இணையத்தில் மீம்ஸ்களின் ராஜாவாக விளங்கினார். இவர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. 


 



'பரியேறும் பெருமாள்' என்ற தனது முதல் படத்திலேயே அங்கீகாரம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வைகை புயல் வடிவேலு. தனது படத்தில் வடிவேலு நடித்தது குறித்த அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். 


வாழ்நாள் கனவு :


தியேட்டரில் வடிவேலு காட்சிகளை வாய் பிளந்து பார்த்துள்ளேன். என்னுடைய அறையில் கூட அவரின் புகைப்படத்தின் போஸ்டர் ஒட்டி வைத்து இருந்தேன். அந்த அளவிற்கு அவரின் தீவிரமான ரசிகன், அவரை எப்போது நேரில் சந்திப்பேன் என்பது வாழ்நாள் கனவாக இருந்தது. அது இப்போது நிஜமாகி அவருக்கு கதை சொல்லி அவரை வைத்து நான் ஒரு படத்தை இயக்குவேன் என்பதை எல்லாம் நினைத்துக்கூட பார்த்ததில்லை. 


 



அமைதியான வடிவேலுவை பார்த்ததில்லையே :


என்னைவிட அதிகமாக வாழ்க்கையை வாழ்ந்தவர். அதனால் அவருக்கு பல விஷயங்கள் தெரியுது. 'லைப் இஸ் பியூட்டிஃபுல்' பார்த்த பிறகு நீயும் நானும் சேர்ந்து இப்படத்தை பண்ணனும் என சொல்லியிருக்கிறார். அவரை கையாள்வது மிகவும் எளிதாக இருந்தது. ஒரு காமெடி கிங் என இந்த தமிழ்நாட்டையே வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். அவரை அமைதியாக இருங்க என சொல்லி தள்ளி நின்னு பார்த்த அனுபவம் புதிதாக இருந்தது. அவரை விடிய விடிய ரசித்த நான் அது வேண்டாம் என சொன்னதும் அவரிடம் இருந்த அமைதியான முகத்தை பார்த்ததும் மதிப்பு கூடியது. அவரை ரசிக்கிற முதல் ரசிகர் நான் தான். நான் உக்கிரபுத்தனா வரணும் அவ்வளவு தானே என கேட்டு கேட்டு சிறப்பாக நடித்து கொடுத்தார். 


வடிவேலு ஆக்ரோஷமானவர்:


வடிவேலு சாரை நன்றாக கூர்ந்து கவனித்தால் தெரியும். அவர் திரைப்படங்களில் மட்டுமே நகைச்சுவையாக நடித்துள்ளார். ஆனால் உண்மையில் கடந்த பத்து ஆண்டுகளாக அவர் மிகவும் சீரியஸான காலகட்டத்தில் தான் இருந்துள்ளார் என்பது புரிந்தது. வரிக்கு வரி ஸ்கிரிப்டை புரிந்து கொண்டு கதையின் போக்குக்கு ஏற்றபடி உள்வாங்கி நடித்தார். அவருடன் பணிபுரிந்த ஒரு பாக்கியமாக கருதுகிறேன்.” எனத் தெரிவித்தார்.