தமிழ்நாடு ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. திமுக ஆட்சி அமைந்து ஏற்கனவே இரண்டு முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
முதலில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் எழுந்த நிலையில், துபாயில் இருந்தபடியே அவர் வகித்த போக்குவரத்துத் துறையை அமைச்சர் சிவசங்கருக்கு வழங்கி, சிவசங்கர் கவனித்து வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை ராஜகண்ணப்பன் வசம் தந்தார் முதல்வர் ஸ்டாலின், இரண்டாவதாக, உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவைக்குள் கொண்டுவரும்போது 10 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக, வனத்துறையை கவனித்து வந்த அமைச்சர் ராமசந்திரனிடமிருந்து அந்த துறை பிடுங்கப்பட்டு, சுற்றுலாத்துறையை கவனித்து வந்த அமைச்சர் மதிவேந்தனுக்கு தரப்பட்டது. மதிவேந்தன் வகித்த சுற்றுலாத்துறை ராமசந்திரனுக்கு மாற்றி வழங்கப்பட்டது.
இந்நிலையில் 3 வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் மீது புகார்கள் வந்த நிலையில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிதாக டி.ஆர்.பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிதாக பதவியேற்ற அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிற்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நிதி அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரம் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அது தொடர்பாக அமைச்சர் மற்றும் முதலமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில், அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதியமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்த நிதி துறை, தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், பால் வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால், அந்த துறை மனோ தங்கராஜிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூவமாக இந்த மாற்றங்கள் செய்யப்படும் முன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அதே சமூகத்தை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ அமைச்சர் ஆக்கப்படுவார் என கூறப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ஊட்டி ராமசந்திரன் மீது அடுக்கடுக்கான புகார்கள் முதல்வர் அலுவலகத்திற்கு சென்றிருப்பதாலும் அவரின் இலாக்கவும் மாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.