அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு அறிவிப்பு, டெல்டா மாவட்டத்தை சார்ந்த ஒருவர் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பது. அதற்கு ஸ்டாலின் டிக் அடித்திருக்கும் சாய்ஸ் தான் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா.


நன்கு படித்தவர், துடிப்பானவர், இளைஞர் என்பதால் டி.ஆர்.பி ராஜாவிற்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற டெல்டா மக்களின் ஆசையும் இதன் மூலம் நிறைவேறியது. 


டி.ஆர்.பி.ராஜாவிற்கு என்று புதிதாக அறிமுகம் தேவையில்லை. அவரது பெயரின் முன் இருக்கும் டி.ஆர்.பி யே அவருக்கான அறிமுகம். திராவிட இயக்க அரசியலில் அரைநூற்றாண்டு காலம் பழம் தின்று கொட்டை போட்ட திமுகவின் சூப்பர் சீனியரான டி.ஆர்.பாலு மற்றும் ரேணுகாதேவி தம்பதியருக்கு ஜூலை 12 1976ல் பிறந்தவர் தான் டி.ஆர்.பி.ராஜா. சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை. ஆனால் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னையில் தான். எம்சிசி பள்ளிப்படிப்பை முடித்தவர், இளங்கலைப் படிப்பை லயோலா கல்லூரியிலும், Conseling Psychology முதுநிலைப் படிப்பை மெட்ராஸ் பல்கலைக்கழகத்திலும் படித்திருக்கிறார். சமீபத்தில்தான் Counselling Psychology and Management பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றார் டி.ஆர்.பி.ராஜா.


மன்னார்குடி எம்எல்ஏ திரு. டிஆர்பி. ராஜா அவர்கள் உளவியல் ( psychology) படிப்பில் , வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் ராஜாவின் ரத்தத்திலும் அரசியல் ஊறிப்போயிருந்தது என்றே சொல்லலாம். 2011 சட்டமன்றத்தேர்தலில் தன்னுடைய செல்வாக்கினை பயன்படுத்தி மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி.ராஜாவை போட்டியிட வைத்தார் டி.ஆர்.பாலு. அந்த ஆண்டு நிகழ்ந்த அரசியல் சுனாமியில் தப்பிப் பிழைத்தவர்களில் டி.ஆர்.பி.ராஜாவும் ஒருவர். அதற்கு முன்பு 1996 முதல் 2006 தேர்தல் வரை கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்தது மன்னார்குடி. அந்த தொகுதியில் சிவபுண்ணியம் 3 முறை வெற்றிபெற்றிருந்தார். 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தான் இருந்தது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனாலும் அந்த தொகுதியில் சிவ ராஜமாணிக்கத்தை களமிறக்கியது அதிமுக. அவரை எதிர்த்து முதன்முறையாக மன்னார்குடி தொகுதியில் களமிறங்கினார் ராஜா. வாக்குவித்தியாசம் குறைவுதான் என்றாலும் வெற்றிபெற்றுவிட்டார். 


எல்லோரிடமும் இறங்கி பேசும் பண்பு. பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வது, குறைகளை தீர்த்து வைப்பது, தொகுதியின் நலனில் அக்கறை காட்டுவது, தொகுதி மேம்பாட்டில் கவனம் செலுத்தியது போன்ற பல்வேறு பாசிடிவ் விஷயங்களால் 2016 சட்டமன்றத்தேர்தலிலும் அவரையே எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுத்தனர் மக்கள். இந்த முறை அவருக்கு டி.ஆர்.பாலுவின் மகன் என்ற அடையாளம் தேவைப்படவில்லை. 2021  சட்டமன்றத் தேர்தலில் டி.ஆர்.பி.ராஜாவை எதிர்த்து அதே சிவ ராஜமாணிக்கத்தை களமிறக்கியது அதிமுக. இந்த முறை 37,393 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றார் டி.ஆர்.பி.ராஜா. மன்னார்குடி தொகுதியில் 3 முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்றிருக்கிறார். 


சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்த இளம் எம் எல் ஏ டி.ஆர்பி ராஜா. 2016ல் சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா 'மை டியர் யங் மேன்' என்று கூறி ராஜாவின் கேள்விக்கு பதிலளித்தார். சட்டமன்றத்தில் அவருக்கு 10 ஆண்டு காலம் அனுபவம் ஏற்கனவே இருப்பதால் சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத நேரங்களில் அவையை வழிநடத்த அறிவிக்கப்பட்டவர்களில் டி.ஆர்.பி.ராஜாவும் ஒருவர்.


ராஜாவுக்கு இருந்த அனுபவத்தின் அடிப்படையில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்கும் போதே, டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2016 தேர்தல்களில் களமிறங்கிய பி.டி.ஆர், அன்பில் மகேஷ் உள்பட சட்டமன்றத்தில் அனுபவம் குறைந்த பலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், டி.ஆர்.பி.ராஜாவுக்கு வழங்கப்படவில்லை. இதனால் டி.ஆர்.பாலு அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதை சரி செய்யும் விதமாக ராஜாவை ஐடி விங் செயலாளராக அறிவித்தது திமுக தலைமை. 


திமுக ஐடி-விங்கில் ஏகப்பட்ட குறைகள், புகார்களை இணைய திமுகவினர் ஆதரவாளர்கள் கூறிக்கொண்டே இருந்தனர். அந்த புகார்கள் எதையும் ஐடி விங் செயலாளராக இருந்த பி.டி,ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்குச் சென்றதோ சேரவில்லையோ, ஐடிவிங் செயல்படாத அணியாகவே பார்க்கப்பட்டது. இதனால் திமுக ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். 


டி.ஆர்.பி.ராஜா சமூக வலைதளங்களில் குறிப்பாக ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். திமுகவினரின் மனநிலையும், அன்றைய ட்ரெண்ட், திமுகவுக்கு எதிராக வரும் அவதூறுகள், என்று அத்தனையும் அத்துப்படி. பல அவதூறுகளுக்கு ராஜாவே பதிலடி கொடுத்திருக்கிறார். சமூக வலைதளங்கள் மூலம் வந்த குறைகளையும் தீர்த்து வைத்திருக்கிறார். சமூக வலைதளங்களில் டிஃபென்ஸ் ஆட்டத்தை மட்டுமே ஆடிக்கொண்டிருந்த திமுக ஐடி-விங்கிடம், அஃபென்ஸ் ஆட்டத்தை எதிர்பார்த்தனர் திமுக ஆதரவாளர்கள். இந்த நிலையில் தான் எல்லா வகையிலும் சீனியரான டி.ஆர்.பி.ராஜாவை அந்த இடத்திற்கு நியமித்தது திமுக தலைமை. தற்போது அடுத்த கட்டமாக  அமைச்சராக உயர்ந்திருக்கிறார் டிஆர்பி ராஜா. அரசியல் அனுபவம் உள்ள டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வந்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி தற்போது தொழில்துறை அமைச்சராகவும் உயர்ந்துவிட்டார். 


திமுக ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புக்கு சரியான தீனி போடுவாரா அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.