தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது தனித்துவமான படைப்புகளால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகத்தினரால் கொண்டாடப்பட்டு வருகிறார். அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜூன் மாதம் 29ம் தேதி வெளியான திரைப்படம் 'மாமன்னன்'. ஜூலை 29ம் தேதி நெட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மாமன்னன் திரைப்படமும் அமோக வரவேற்பை பெற்று ஓடிடி தளத்தில் முன்னிலை வகிக்கிறது.
உதயநிதி ஸ்டாலின், வைகை புயல் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. உதயநிதி நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் என்பதாலும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே இருந்து வந்தது. மேலும் இதுவரையில் அவர் நடித்த படங்களிலேயே அதிக அளவிலான ஓப்பனிங் பெற்றது இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் அழுத்தமான திரைக்கதை, நடிகர்களின் அபாரமான நடிப்பை திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டினர், ரசிகர்கள் கொண்டாடினர். இப்படி பாராட்டுகளை குவித்து வரும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு பாடிய பாடல் ஒன்றின் வீடியோவை, மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஒரு நெகிழ்ச்சியான குறிப்பையும் பதிவிட்டுள்ளார்.
வடிவேலு பாடிய " ஞாயிறு என்பது கண்ணாக... திங்கள் என்பது பெண்ணாக" என்ற பாடலை போஸ்ட் செய்து "காதலும் தத்துவமும் நிறைந்த பாடல்களை பாடக்கூடியவராக மாமன்னனை நான் கண்டுணர்ந்த பாடலும், பயணமும் இந்த நொடி தான்" என ஒரு குறிப்பையும் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த போஸ்ட்டும் வடிவேலு பாடிய வீடியோவை இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
காமெடியில் முடிசூடா மன்னனாக விளங்கிய வடிவேலு ஒரு சில காலமாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தது அவரது ரசிகர்களுக்கு வேதனையை கொடுத்தது. அவர் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.