நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 


சூப்பர் ஸ்டார் ரஜினி - நெல்சன் காம்போ 


எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடந்து 4வது முறையாக ரஜினிகாந்தை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘ஜெயிலர்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இந்த வார இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. அதேசமயம் பீஸ்ட் பட தோல்வியால் இயக்குநர் நெல்சனின் படத்தில் ரஜினி நடிக்க மாட்டார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதனை பொய்யாக்கி நெல்சன் மீதான நம்பிக்கையில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். 


ரசிகர்களை கவர்ந்த பாடல்கள் 


முன்னதாக ஜெயிலர் படத்தில் இருந்து காவாலா, ஹூக்கும், ஜூஜூபி ஆகிய 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து  கடந்த ஜூலை 28 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பேசிய கருத்துகள் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 6 ஆம் தேதி சன் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 


ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் 


இந்நிலையில் கோலிவுட் பிரபலங்கள் பெரிதும் எதிர்பார்த்த ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ரஜினி கம்பேக் கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ட்ரெய்லரில் அமைதியான மற்றும் ஆர்ப்பாட்டமான ரஜினி என இருவகை கேரக்டர்கள் உள்ளதால் தியேட்டர்களில் திரை தீப்பிடிக்கும் என்றெல்லாம் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் ரம்யாகிருஷ்ணன், இந்துஜா, வசந்த் ரவி, விநாயகம், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்களும் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோரின் காட்சிகள் இடம் பெறவில்லை. இதனால் அவர்களின் காட்சிகள் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளதா? என கேள்வியெழுப்பியுள்ளனர். 


<