தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக கொண்டாடப்படும் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி செல்வராஜ். இவரது பெற்றோர்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு தொழில் செய்து வந்தனர். சினிமா மீது ஆர்வம் கொண்ட அவர், சென்னைக்கு வந்து இயக்குநர் ராமிடம் 10 ஆண்டுகாலம் உதவியாளராக பணியாற்றினார். அவரின் கற்றது தமிழ் படத்தில் ஒரு காட்சியில் நடித்தும் உள்ளார். ராம் இயக்கிய கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படங்களில் பணியாற்றிய மாரி செல்வராஜ், 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கியிருந்தார். 


இப்படம் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த பல அனுபவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டிருந்தது. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியரான மாரி செல்வராஜ், பிரபல வார இதழான ஆனந்த விகடனில்,  "மறக்க நினைக்கிறேன்" என்ற தொடரை எழுதி வந்தார். அதன் மூலம் இயக்குநர் பா.ரஞ்சித்தை கவர்ந்த நிலையில், தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாளை தயாரித்தார். வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பல அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. 


இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் மீது சாதிய முத்திரை குத்தப்பட்டது. அவர் ஆதிக்க சாதியினருக்கு எதிராக படம் எடுத்து வன்முறையை தூண்டுகிறார் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. இதன்பிறகு வெளிப்படையாகவே தன்னுடைய கருத்துகளை தெரிவிக்க ஆரம்பித்தார். அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரிகளுக்கு ஏற்ப, அனைவரும் சமம் தான். நான் எந்த சாதியினருக்கும் எதிரானவன் அல்ல, அதேசமயம் காலம் காலமாக பின்தங்கி இருப்பவர்களை சக மனிதனாக பாருங்கள் என்பதை தான் அழுத்தமாக சொல்ல நினைப்பதாக கூறினார். 


ஆனாலும் மாரி செல்வராஜ் படமெடுக்கிறார் என்றாலே அங்கு ஒரு பிரச்சினையை சிலர் வேண்டுமென்றே கிளப்புகிறார்கள். சமூகத்தில் நடக்காத ஒன்றை தன் படங்களில் காட்டவில்லை. வன்முறைக்கு வன்முறை தான் தீர்வு என சொல்லவில்லை. அதனை கையில் எடுப்பவர்களுக்கு என்ன நடக்கும், உரிமைகளை உரக்க கேட்க வேண்டும் என்பது அடிப்படையான தீர்வாக சொல்கிறார். இரண்டாவது படமான கர்ணன், சாதாரண பேருந்து நிறுத்தம் என்ன பெரிய பிரச்சினையா என்று நாம்  நினைக்கலாம். 


ஆனால் நம்மை சுற்றி பலரும் இதுபோன்ற இன்னல்களை இன்றும் அனுபவித்து வருகிறார்கள் என்பது தெரிந்தும், தெரியாமலும் நடக்கும் நாமே இத்தகைய அடிப்படை பிரச்சினைகளுக்கு காரணமானவர்கள். தொடர்ந்து கடைசியாக மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் அரசியல் களத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி பலியாடு ஆகிறார்கள் என்பதை அந்த இடைவேளை காட்சியே உணர்த்தி விடும். இப்படி ஒவ்வொரு படத்திலும் அவர் சமூக கருத்தை சொல்ல வருகிறார் என்பதை விட, மனிதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார் என்பதே உண்மை. 


மாற்றம் வருமா என்பது முக்கியமில்லை. மாற்றத்திற்கான முயற்சி மேற்கொள்வதே மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் மாரி செல்வராஜ் மென்மேலும் பல தரமான படைப்புகளை தர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 




மேலும் படிக்க: Leo Audio Launch: ‘அடிபட்டு மேலே வருபவனே தலைவன் ஆவான்’ .. ரசிகர்களை உசுப்பேற்றும் விஜய்.. வீடியோ வைரல்..!