மலையாளத் திரையுலகில் மிகப் பெரிய பொருட் செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் மரைக்காயர். பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, பிரபு, அர்ஜுன், ப்ரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஆங்கிலேயர்களை எதிர்த்து முதலில் கடற்படையை உருவாக்கிய குன்ஹாலி மரைக்காயரின் உண்மைக்கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு பின்னர் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவெடுத்தது. இந்தப் படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த படம், சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.



 


அண்மையில் கூட நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர்  ‘மரைக்காயர்’ படப்பிடிப்பு தளத்தில் பங்குபெற்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தற்போது  கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அந்தப் பதிவில் படத்தில் அர்ச்சா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னுதாரனமாக இருந்த ஓவியங்களை அவர் பகிர்ந்துள்ளார். இது மட்டுமன்றி இன்னும் 3 நாட்களே உள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். இந்தப் படம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேஷூக்கு மிக அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக மகாநதி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை கீர்த்தி சுரேஷூக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.