திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் 8 அரசு மருத்துவமனைகள் மற்றும் 254 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் உள் நோயாளியாகவும் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாதாரண காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 நபர்கள் சாதாரண காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னார்குடி அரசு மருத்துவமனை, உள்ளிட்ட மருத்துவமனைகளில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் 50க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



 

மேலும் மாவட்டம் முழுவதும் 4 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பாதிக்கப்பட்ட 4 நபர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு கொசு வலை பொருத்தப்பட்ட தனி படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் காய்ச்சல் அடித்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் காய்ச்சல் காரணமாக வரும் நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீர் உள்ளிட்ட அனைத்து மருந்து பொருட்களும் மருத்துவமனைகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனி பிரிவு தொடங்கப்பட்டு அந்தப் பிரிவில் 25 படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளன என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.



 

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 89 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று இதுவரை 85 நபர்கள் நலமுடன் வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் காலை 6 மணி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும்  டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் யாரும் செயல்பட்டால் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.