விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தேங்கியிருந்த மழைநீரில் நாற்காலியைக் கொண்டு அமைத்த பாதையில் நடந்து செல்லும் காட்சி வைரலாகி வருகிறது.
சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, வேளச்சேரியில் உள்ள விசிகவின் அலுவலகம், திருமாவளவன் குடியிருக்கும் வீடு மழைநீரால் சூழப்பட்டுள்ளது. தேங்கிய மழை நீரில் நடப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, தொண்டர்கள் அங்கிருந்த நாற்காலிகள் கொண்டு பாதை ஏற்படுத்தினர். இந்த நாற்காலியின் மீது, தொண்டர்களின் உதவியுடன் திருமாவளவன் ஏறி சென்று காரை சென்றடையும் காட்சி நேற்று வெளியானது. இந்த காணொலியை வைத்துக் கொண்டு, திருமாவளவன் தனது கட்சித் தொண்டர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்ற சகட்டு மேனிக்கு பேசத் தொடங்கினர்.
தொல். திருமாவளவன் மீது தேவையற்ற அவதூறு பரப்பப்பட்டு வருவதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு தெரிவித்தார். இதுகுறித்து அவர், வெளியிட்ட ட்விட்டர் பதிவில், வேளச்சேரியில் மருதம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள ஓர் அறையில் தான் எமது தலைவர் கடந்த15 ஆண்டுகளாக தங்கி வருகிறார்.கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் எப்படி கீழ்த்தளம் முழுக்க தண்ணீர் புகுந்ததோ,அப்படி தான் இந்த ஆண்டும்.
ஒரு தலைவர் நினைத்தால் சொகுசு ஓட்டலில் கூட தங்கலாம்.ஆனால் அதையெல்லாம் விடுத்து தம்பிகளோடவே தங்குகிறார்.முழங்கால் அளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள் தம்பிகள்.இது கூட பொறுக்க முடியாத அரசியல் வன்மத்தர்களும் அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்" என்று பதிவிட்டார்.
முன்னதாக, எஸ்சி- எஸ்டி மற்றும் கிறித்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கான படிப்பு உதவித் தொகைக்கு வருமான வரம்பை உயர்த்த வேண்டும் என்று விசிக சார்பில் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வருமான வரம்பை உயர்த்தியுள்ள முதல்வருக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
டெல்லியில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில், கலந்துகொள்ள, தனது குடியிருப்பில் இருந்து சென்னை விமான நிலையம் சென்ற போது இந்த காணொலி எடுக்கப்பட்டதாக தெரிகிறது.