90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர் என்றால் பலரது நினைவிற்கும் முதலில் வருபவர் மன்சூர் அலிகான் தான். பிரபு நடித்த ‘வேலை கிடைச்சுருச்சு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். அதன் பின்னர் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். திரையுலகை கடந்து அரசியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், அக்கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலின் போது திண்டுக்கல் தொகுதியில் கூட போட்டியிட்டு தோல்வி கண்டார்.



சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கினார். தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். மேலும் நடிகர் விவேக் மரணம் குறித்தும், கொரோனா தடுப்பு மருந்து குறித்தும் அவதூறு பரப்பியதற்காக மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய மன்சூர் அலிகானுக்கு, தடுப்பு மருந்து குறித்து கருந்து தெரிவிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.



நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வந்தபோது, நடிகர் மன்சூர் அலிகான் செய்தியளர்களை சந்தித்தார். அவரிடம் நாம் தமிழர் கட்சியின் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் அவர் போட்டியிடாதது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் போட்டியிடவில்லை, சில பிரச்சனைகள், அதற்கு மேல் வேலையும் அதிகம். வேலையில் கவனம் செலுத்துவதால் போட்டியிட முடியவில்லை. நாம் தமிழர் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள், இந்த வருடமும் நன்றாக வாக்குகள் வந்துகொண்டிருக்கின்றன. கடந்தமுறை 30 லட்சம் வாக்குகள் வாங்கி இருந்தோம். இம்முறை அதற்கு மேல் வரும்" என்றார். மன்சூர் அலிகான் தனது மனைவியுடன் வாக்களிக்க வந்திருந்தார். அவரது மனைவி ஹிஜாப் அணிந்திருந்தார். செய்தியாளர்கள் ஹிஜாப் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பியபோது, அவரது மனைவியை கலாய்ப்பதுபோல, ஹிஜாப்பை சர்ச்சை ஆக்குபவர்களை கலாய்த்தார். "அவரவரை அவரவர் போக்கில் வாழ விட வேண்டும். தவறான போக்கு, எனக்காக, எங்கள் சமூகத்திற்காக எங்கள் சகோதரர்கள் குரல் கொடுக்கிறார்கள். அதனால் நான் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இது என் மனைவியார் அபிதா பானு." என்று கூறிவிட்டு மனைவியை பார்த்து, "ஹே ஹிஜாப் போட்ருக்க, முகத்தை மறச்சுக்க, போச்சு போ, எல்லா டிவிலயும் வர போற, மாஸ்க் போட்டுக்க" என்று கூறிவிட்டு, செய்தியாளர்களிடம், "மாஸ்க்கே ஒரு ஹிஜாப்தான், உலக நாடுகள் முழுக்க போட்டுக்கொள்கிறார்கள், இதில் பிரச்சனை செய்பவர்களுக்கு காலம் பாடம் கற்பிக்கும்." என்று கூறினார்.