தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, இயக்குநராக கலக்கிய நடிகர் மன்சூர் அலிகான் அவ்வப்போது சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் எதையாவது பேசி ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிடுவார். தற்போது வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான். அந்த வகையில் மக்களை சந்தித்து தன்னுடைய பிரச்சாரத்தை வேலூரில் துவங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தடாலடியாக பதிலளித்து அனைவரையும் கதிகலங்க செய்துவிட்டார்.
தனியாக 'இந்திய ஜனநாயகப புலிகள் கட்சி' என்ற பெயரில் கட்சி ஒன்றை துவங்கி அதன் தலைவராக மன்சூர் அலிகான் இருந்து வருகிறார். புதிதாக ஒரு கட்சியை துவக்குவதற்கு என்ன காரணம் என்பது குறித்து அவர் பதிலளிக்கையில் ஆண்டு கணக்கில் ஆட்சி செய்யும் பல கட்சிகளும் அவர்களால் உருவாக்கப்பட்டது கிடையாது. முந்தைய தலைவர்கள் செதுக்கி வைத்த பாதையில் புற்றுக்குள் புகுந்த கரையான் போல அரித்துக்கொண்டு அனுபவித்து வருகிறார்கள்.
கட்சி தொடங்குவது கஷ்டம் தான். என்னால் எவ்வளவு முடியுமோ அது வரை பாடுபடலாம் என முடிவெடுத்துள்ளேன். அந்த ஆர்வத்தில் தான் தனி கட்சி துவங்கினேன். ஜனநாயகத்தில் புதியவர்கள், எளியவர்கள் வரவேண்டும். ஆட்சியாளர் எளிமையாக இருந்தால் ஆட்சியும் எளிமையாக இருக்கும். அதற்காக தான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை துவங்கியுள்ளேன் என பதில் அளித்து இருந்தார்.
முதலில் மன்சூர் அலிகான் ஆரணி தொகுதியில் போட்டியிடுவதாக பேசப்பட்டது ஆனால் தற்போது அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் திருவண்ணாமலை, ஆரணி, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் ஜனநாயக புலிகள் கட்சி போட்டியிட உள்ளதாக தெரிவித்து இருந்தார். ஆட்சி அதிகாரம் என்பது அனைவருக்கும் பகிரப்பட்ட வேண்டும். பதவியில் இருப்பவர்கள் ஏற்கனவே நிறைய ஆட்சி செய்துவிட்டார்கள். அவர்கள் விலகினால் எளியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என சொல்கிறீர்கள். ஏற்கனவே சீமான், அண்ணாமலை, விஜய் உள்ளிட்டோர் அரசியல் களத்தில் உள்ளனர். அவர் இளைஞர்கள் என்றால் நானும் இளைஞன்தான். கொஞ்சமாக முடி நரைத்துவிட்டது. சீமான் மேனேஜர் ஜெனரல், விஜய் சிஎம் ஆகும்போது நான் மந்திரியாக கூடாதா? இதில் உங்களுக்கு ஏதாவது மாற்று கருத்து இருக்கிறதா? என செய்தியாளர்கள் பக்கம் கேள்விக்கணைகளை எய்தினார் மன்சூர் அலிகான். அவரின் அதிரடியான பதிலை கேட்டு பத்திரிகையாளர்களே திகைத்து போனார்கள்.