பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குநராக அறிமுகமாகும் படத்துக்கு மார்கழி திங்கள் எனப் பெயரிடப்பட்டுள்ளது.


மார்கழி திங்கள்


இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், பாரதிராஜாவின் மகனும் பிரபல நடிகருமான மனோஜ் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘மார்கழி திங்கள்’ . பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 


புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கவுள்ளார். புதுமுக நடிகர்களான ஷியாம் செல்வன், ரக்‌ஷனா ஆகியோர் இப்படத்தில் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர்.


ர வரிசையில் மற்றுமொரு நாயகி!


இந்நிலையில், ராதிகா, ராதா, ரேவதி, ரேகா ஆகிய தான் அறிமுகப்படுத்திய நடிகைகளின் வரிசையில் இப்படத்தின் நாயகிக்கு ரக்‌ஷனா எனப் பெயரிட்டுள்ளதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 


சென்ற 1999ஆம் ஆண்டு தன் தந்தை பாரதிராஜா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘தாஜ்மஹால்’  படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜ், சமுத்திரம், அல்லு அர்ஜூனா, கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


 






மனோஜ் பாரதிராஜா


இறுதியாக கடந்த ஆண்டு கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான விருமன் படத்தில் மனோஜ் நடித்திருந்தார்.  நடிகராவதற்கு முன் அமெரிக்காவில் தியேட்டர் ஆர்ட்ஸ் படிப்பை படித்து முடித்த மனோஜ், இயக்குநர் மணிரத்னத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்ததுள்ளார். 


இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதற்கு மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் படம் அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இருக்கும் என்றும் மனோஜ் முன்னதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார்.


மாடர்ன் லவ்வில் பிஸியான பாரதிராஜா


இயக்கம் தாண்டி நடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இயக்குநர் பாரதிராஜா இறுதியாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தார்.


வரும் மே.18ஆம் தேதி வெளியாக உள்ள ‘மாடர்ன் லவ்’ ஆந்தாலஜியில் ‘பறவைக் கூட்டில் வாழும் மான்கள்’ எனும் படத்தை பாரதிராஜா இயக்கியுள்ளார். திராகராஜன் குமாரராஜா, பாலாஜி சக்திவேல், கிருஷ்ணகுமார் ராம்குமார், ராஜுமுருகன், அக்‌ஷய் சுந்தர் ஆகியோர் பிற படங்களை இயக்கியுள்ளனர். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்துள்ள நிலையில் இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.


மேலும் படிக்க: Manobala: "வெளிய சொல்ல முடியாத சேட்டை.. அழாமல் பேசுவது ரொம்ப சிரமம்.." மனோபாலா நினைவால் உருகிய மன்சூர், டெல்லி கணேஷ்..!