சென்னை தியாகராய நகரில் ரூ 30 கோடி ரூபாய் செலவில் கட்டபட்டுள்ள ஆகாய நடைபாதையை முதல்வர் மு.க ஸ்டாலின்  திறந்து வைத்தார்.


இந்தியாவின் மிக நீண்ட ஆகாய மேடை:


570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலத்தில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், இந்த மேம்பாலத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த பாலம்தான் இந்தியாவின் மிக நீண்ட ஆகாய மேடை ஆகும். மேலும், புதியதாக திறக்கப்பட்டுள்ள இந்த நடைமேடையில் நடந்துசென்று ஆய்வு செய்தார். அவருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மேயர் பிரியா ஆகியவர்கள் முதலமைச்சருடன் ஆகாய மேடையில் சென்று பார்வையிட்டனர்.


சி.சி.டி.வி. கேமராக்கள், நகரும் படிக்கட்டுகள்:


இந்த நடைமேடை முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த நடைமேடையில் ஏறிச் செல்வதற்காக நகரும் படிகட்டுக்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.மேலும் மாற்றுத்திரணாளிகள் பயன்படுத்தக் கூடிய வகையில் அவர்களின் நாற்காலிகள் செல்லும் அகலத்தை கருத்தில் கொண்டு  இந்த நடைமேடை  அமைக்கப்பட்டிருக்கிறது.


3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணி:


சென்னையின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.28 கோடியே 45 லட்சம் செலவில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.


தியாகராய நகர் வரும் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் மேட்லி சாலை சந்திப்பு வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில் இந்த ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வந்தது. பின்னர், கொரோனா காலகட்டத்தில் இப்பணிகள் தாமதம் ஆகியது. பின்னர், மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது.


நீண்ட ஆகாயமேடை:


நீண்ட காலமாக இந்த திட்டம் எதிர்பார்க்கப் பட்டு வந்த நிலையில் கடந்த ஓராண்டு காலமாக இந்த நடைபாதையை கட்டி முடிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன ஏற்கனெவே கால தாமதமாகிய காரணத்தினால் மேற்கொண்டு காலம் தாழ்த்தாமல் இரவுப் பகலாக இந்த கட்டுமான வேலைகள் முடிந்துள்ளன.வெகு நாட்களாக பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த நடைமேடை திறப்பு மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.


இந்த நடைமேடை திறக்கப்பட்டதன் மூலம் தியாகராய் நகரில் வியாபாரம் செய்யக் கூடிய சிறு வியாபாரிகளுக்கு இந்த ஆகாய நடைமேடை மிக பயனுள்ளதாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்தியாவிலேயெ மிக நீண்ட ஆகாய நடைமேடை என்கிற சிறப்பை  இந்த நடைமேடை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இன்றுமுதல் இந்த நடைமேடை பொதுமக்களின்  அனைவரின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப் பட்டுள்ளது.