குணா குகையில் பற்றி நடிகர் கமல்ஹாசன் பல்வேறு ஆச்சரியப்படும் தகவல்களை மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவுடன் நடிகர் கமல்ஹாசன் பகிர்ந்துகொண்டார்
மஞ்சுமெல் பாய்ஸ்
சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான படம் மஞ்சுமெல் பாய்ஸ் . பிரேமப் படத்தைத் தொடர்ந்து பெரும் திரளாக தமிழ் சினிமா ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கொண்டாடும் படமாக மாறியுள்ளது மஞ்சுமெல் பாய்ஸ். இப்படத்திற்கு தமிழர்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததற்கு காரணம் கமல்ஹாசனின் குணா படம். மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவும் நடிகர் கமல்ஹாசனும் சந்தித்து கொண்டு உரையாடியுள்ள வீடியோவை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. குணா குகைப் பற்றி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை கமல்ஹாசன் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
காதல் என்பது நட்புக்கும் பொருந்தும்
படத்தைப் பற்றி பேசிய கமல்ஹாசன் “மஞ்சுமெல் பாய்ஸ் படம் எனக்கு பிடித்திருந்தது . அதில் கமல்ஹாசன் வருவதால் மட்டும் இல்லை. காதல் என்பது நட்புக்கும் பொருந்தும். மொஹப்பத் என்கிற வார்த்தை நட்புக்கும் பயன்படுத்தப் படுகிறது. நாம் மட்டும் தான் நட்பையும் காதலையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை. குணா படம் எடுக்கும்போது எங்களுக்கு ஒரு சிறப்பான அனுபவமாக அது அமைந்தது. உங்களுக்கு அப்படிதான் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
குணா குகையில் இருக்கும் பாறை மிக சமீப காலத்தில் உருவான பாறை . மலை ஏறுவதைப் போல் அந்த பாறையில் ஏறிவிட முடியாது. பாறையை பிடித்தால் அது கையுடன் உடைந்து வரும் தன்மைக் கொண்டது. அதனால் எங்கு பிடித்து ஏற வேண்டும் என்பது தெரிவது எளிதான காரியம் இல்லை.
குணா குகையில் குரங்குகளில் குட்டிகள் உள்ளே விழுந்தபின் அவைக்கு திரும்ப எப்படி வருவது என்று தெரியாமல் அங்கேயே இறந்துவிடும் . அந்த இடத்தில் இருந்து எடுத்த குரங்கு மண்டை ஓடுகள் இன்னும் என்னிடம் இருக்கின்றன. ஹேராம் படத்தில் அவற்றை நான் பயன்படுத்தி இருப்பேன். அந்த குகைக்குள் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம் . சிலர் அங்கு சிறுத்தை இருப்பதாக சொல்வார்கள். சிலர் மலைப்பாம்பு இருக்கும் என்று சொல்வார்கள். அங்க நாம் என்ன பார்க்கப் போகிறோம் என்பது தெரியாமல் இருப்பதே அந்த இடத்தை மர்மமானதாக மாற்றுகிறது. கொடைக்கானல் மட்டும் இல்லை தமிழ் நாட்டில் இதே மாதிரியான நிறைய இடங்கள் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் குணா படத்திற்கு முதலில் மதிகெட்டான் சோலை என்று தான் பெயர் வைக்கலாம் என்று நினைத்தேன். நான் அந்த டைட்டில் சொல்லும்போது ஒட்டுமொத்த செட்டில் இருந்தவர்களும் எனக்கு எதிராக பேசினார்கள்.
இப்போது குணா குகை நிறைய மாறிவிட்டது. நாங்கள் அந்த இடத்திற்கு போனபோது அது மனித தடம் இல்லாத ஒன்றாக இருந்தது. நாங்கள் போனபோது அந்த காடு இன்னும் அடர்த்தியாக இருந்தது. மரத்தின் வேர்கள் வெளியே தெரியாது. அந்த காலத்தில் குணா குகைக்கு செல்வதற்கான வழி என்று எதுவும் இல்லை. நாங்கள் தான் அதற்காக வழியமைத்தோம். அதேபோல் புன்னகை மன்னன் படத்திற்கு முன்பு வரை அதிரபள்ளில் நீர்வீழ்ச்சியை தூரத்தில் இருந்து தான் காட்டுவார்கள் . முதல் முறையாக உள்ளே சென்று காட்டியது நாங்கள் தான். ” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்
இதனைத் தொடர்ந்து கண்மணி அன்போடு பாடல் குறித்து பேசியபோது “ கண்மணி அன்போடு பாடல் இளையராஜாவும் நானும் ஒருவருக்கு ஒருவர் எழுதிக் கொண்ட ஒரு காதல் கடிதம் தான்” என்று அவர் கூறியுள்ளார்.