ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படம்  ‘துணிவு’. இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியர் துணிவு திரைப்படத்தில் தான் ஒரு பாடல் பாடியதாக கடந்த மாதம் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார்.




இதனிடையே, துணிவு திரைப்படத்தின் முதல் சிங்கிளான 'சில்லா சில்லா' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கிளான 'காசேதான் கடவுளடா' பாடல் நேற்று பிற்பகல் 2 மணியளவில் வெளியானது. இது தொடர்பாக வெளியான லிரிக்கல் வீடியோவில், மஞ்சு வாரியர் பாடுவது இடம் பெற்றிருந்தாலும், பாடலில் அவரது குரல் இல்லை; இதனைப்பார்த்த நெட்டிசன்கள் பாடலில் நடிகை மஞ்சு வாரியரின் குரல் இல்லவே இல்லை என கூறி, பலவிதமாக ட்ரோல் செய்தனர். 










மேலும் சிலர் 'காசேதான் கடவுளடா' பாடலில் ஏன் மஞ்சுவின் குரல் இல்லை என கேள்வியும் எழுப்பி இருந்தனர். இவை அனைத்திற்கும் பதிலளிக்கும் விதமாக நடிகை மஞ்சு வாரியர் ட்வீட் ஒன்று செய்துள்ளார்.






அதில் 'காசேதான் கடவுளடா' பாடலின் லிரிக்கல் வீடியோ தான் வெளியாகி உள்ளது. "எனது குரல் கேட்கவில்லை என வருத்தப்பட்டவர்கள் அனைவரும் கவலை கொள்ளாதீர்கள். நான் பாடியது வீடியோ வெர்ஷனுக்காக… உங்களது அக்கறைக்கு நன்றி! அனைத்து ட்ரோல்களையும் ரசித்தேன். அன்புடன் மஞ்சு வாரியர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


ஒரு புறம் நடிகையின் இந்த ட்வீட்டைக் கண்டு ஆறுதல் அடைந்த ரசிகர்கள், சிலர் அவரின் இந்த செயலையும்  ட்ரோல் செய்துள்ளனர்.  ஒருவர், 'சமூக வலைதளங்களில் நடக்கிறது எல்லாம் உங்களுக்கு தெரிகிறதா' எனவும் 'தக் லைஃப்' எனவும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.


2019 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தின் மூலம் மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தற்போது அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த திரைப்படம் அஜித், போனி கபூர், ஹச்.வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள மூன்றாவது திரைப்படம் என்பதால் துணிவு திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.





துணிவு படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகர் அஜித் நீண்ட தாடியுடன் இருந்தார். படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த பின், க்ளீன் ஷேவ் லுக்கிற்கு மாறிய அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் அஜித்தின் புதிய லுக் அவரது அடுத்த திரைப்படத்திற்காகத்தான் எனவும் பேசப்பட்டது. துணிவு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார் நடிகர் அஜித். இந்த திரைப்படம் ரொமான்டிக் ட்ராமா திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.