கத்தார் நாட்டில் நேற்று இரவு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை ரசிகர்கள் கண்டிப்பாக அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள். ஆட்டத்தின் முதல் நொடி முதல் பரபரப்பாக இருந்த இந்த போட்டி 80வது நிமிடம் முதல் ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்துக்கொண்டே இருந்தது.
இந்த போட்டியின் பெனால்டி ஷூட் அவுட் முறையில் இறுதியில் அர்ஜெண்டினா தனது 36 ஆண்டுகால உலகக்கோப்பை தாகத்தை தீர்த்துக்கொண்டது. இந்த போட்டியில் அர்ஜெண்டினாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த மெஸ்ஸி 3 கோல்களை( பெனால்டி ஷூட் அவுட் உள்பட) அடித்து அசத்தினார்.
இந்த தொடரில் மொத்தம் 7 கோல்களை விளாசிய அர்ஜெண்டினா கேப்டனும், கால்பந்து ஜாம்பவனுமாகிய மெஸ்ஸிக்கு உலகக்கோப்பையுடன் தொடர் நாயகனுக்கு வழங்கப்படும் தங்கப்பந்தான கோல்டன் பால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில் தங்கப்பந்தை வென்றதன் மூலம் மெஸ்ஸி புதிய சாதனை படைத்துள்ளார்.
92 ஆண்டுகால உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில், சிறந்த வீரருக்கான கோல்டன் பாலை ( தங்க பந்து) இரு முறை வென்ற ஒரே வீரர் மற்றும் முதல் வீரர் என்ற புதிய வரலாற்றை மெஸ்ஸி படைத்துள்ளார். இதற்கு முன்பாக, 2014ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி தங்கபந்து வென்று சாதனை படைத்திருந்தார்.
உலகக்கோப்பை கால்பந்தை அர்ஜெண்டினா அணி வெல்ல வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பத்திற்கு ஒரே காரணமாக இருந்தவர் மெஸ்ஸி. 35 வயதான மெஸ்ஸி இதுவரை கால்பந்தில் படைக்காத சாதனைளே இல்லை என்று சொல்லுமளவிற்கு சிறந்த வீரருக்கான விருது உள்பட ஏராளமான விருதுகளை படைத்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். இதற்கு முன்பு விளையாடிய 4 உலகக்கோப்பையிலும் சேர்த்து 6 கோல்கள் மட்டுமே அடித்திருந்த மெஸ்ஸி இந்த உலகக்கோப்பையில் 7 கோல்களை விளாசி மொத்தம் 13 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.
மெஸ்ஸியின் இத்தனை ஆண்டுகால கால்பந்து சாதனைகளுக்கே கிரீடமாக அமைந்திருபக்கும் உலகக்கோப்பையின் மின்னும் வைரக்கல்லாய் மாறியுள்ளது இந்த தங்க கால்பந்து.
மேலும் படிக்க: Macron comfort Mbappe: "வீரனே கலங்காதே..." உடைந்து நொறுங்கிய எம்பாப்பேவை தேற்றிய பிரான்ஸ் அதிபர்..!
மேலும் படிக்க: FIFA WORLDCUP 2022: ஒரு வழியாய் நடந்து முடிந்த ஃபிபா உலகக்கோப்பை போட்டி: 3,580 கோடி பரிசுத்தொகையில் யாருக்கு எவ்வளவு? - முழு விவரம்