காதல் படம் பார்த்து விட்டு தான் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என தான் முடிவெடுத்ததாக இயக்குநர் ராகவன் தெரிவித்துள்ளார். 


மஞ்சப்பை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநரானார் ராகவன். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து கடம்பன், மை டியர் பூதம் என 3 படங்கள் இயக்கியுள்ளார். அடுத்ததாக ஒரு படம் இயக்கி வருகிறார். இயக்குநர் ராகவன் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி தெரிவித்துள்ளார் 


அதில், “நான் ஒவ்வொரு படத்துக்கும் கதை பண்ணுவதற்கு அதிக இடைவெளி எடுத்துக் கொள்வேன். அதுதான் 10 ஆண்டுகளில் 4 படங்கள் மட்டுமே பண்ண காரணமாக அமைந்தது. என்னுடைய பாட்டி சென்னைக்கு வந்து ஒரு மாதம் இருந்தார்கள். அதைத்தான் மஞ்சப்பை கதையாக அமைந்தேன். 


என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தது இயக்குநர் பாலாஜி சக்திவேல் தான். அவர் இயக்கிய காதல் படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடந்து கொண்டிருந்தது.நான் அப்போது பிரபலமான கேசட் கடை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என் கடைக்கு பின்னால் தான் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்ததை பார்த்தேன். என்னுடைய அப்பா மதுரையில் ராமராஜன் நடத்திய தியேட்டரில் வேலை பார்த்தார். அதற்கு முன்பு கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனிடம் பணியாற்றினார். நாங்கள் எப்போதும் தியேட்டரில் தான் இருப்போம். 


காதல் படம் ரிலீசான பிறகு தியேட்டரில் பார்த்து விட்டு ஒரே அழுகை. சினிமா தான் நம் வாழ்க்கை என்பதை மறந்து அதை வேற எங்கேயோ தேடிக் கொண்டிருக்கிறோம். அப்ப எனக்கு கல்யாணமாகி 3 மாதம் தான் ஆகியிருந்தது. நாங்கள் காதல் திருமணம் செய்துக்கொண்டோம். காவல் நிலையத்தில் தான்  கல்யாணம்  நடந்தது. அங்கிருந்து சென்னை வந்த பிறகு பாலாஜி சக்திவேலிடம் சேர வேண்டும் என காத்திருந்தேன். அவருடைய குடும்பத்துடன் நல்ல பழக்கம் இருந்தது. 


இதன்பின்னர் இயக்குநர் ஜி.வி.குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அப்போது பெப்சி விஜயனிடம் வேலை பார்த்தேன். அதன்பின்னர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். என்னுடைய தம்பி உதவி எடிட்டராக இருந்தால் அவனுடைய உதவியால் வாய்ப்பு கிடைத்தது. களவாணி படத்தில் போஸ்ட் புரொடக்‌ஷனில் வேலை செய்தேன். பின்னர் வாகை சூடவா படம் முழுவதும் பணியாற்றி விட்டு இனி இயக்குநர் ஆகலாம் என சற்குணத்திடம் இருந்து வெளியேற முடிவு செய்தேன். 


அதைக் கேட்டு விட்டு சற்குணம் கதை இருந்தால் சொல் என கூறினார். நானும் கதை சொன்னால் இதெல்லாம் ஒரு கதையா என சத்தம் போட்டார். இரண்டாவதாக நான் சொன்ன கதை தான் மஞ்சப்பை. என் வாழ்க்கையில் நடந்த 10 காட்சிகளை அடிப்படையாக கொண்டு கதை உருவாக்கி பாட்டிக்கு பதில் தாத்தாவாக மாற்றினேன். கதையை சொன்னதும் நான் தான் இயக்குவேன் என இயக்குநர் சற்குணம் என சொன்னார். 


முதலில் அந்த கேரக்டரில் ஆடுகளம் ஜெயபாலன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பாரதிராஜா போன்றோர் பெயரை பரிசீலித்த நிலையில் சற்குணம் தான் ராஜ்கிரண் பெயரை சொன்னார். விமலிடம் கதை சொன்னதும் ராஜ்கிரண் நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னார். விமல் கதை கேட்டும் அழுதார்” என இயக்குநர் என்.ராகவன் தெரிவித்துள்ளார்.