1000 Rs For School Students in Tamilnadu: அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் மாதாமாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்ப் புதல்வன் திட்டம் என்ற பெயரில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
ஐம்பெரும் விழாவில் முதல்வர் உரை
பள்ளிக் கல்வித்துறை சார்பில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஐம்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இதில், 2023-2024 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கி, 67ஆவது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (14.06.2024) இந்த விழா நடைபெறுகிறது.
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ’’பள்ளிக் கல்வித்துறை பொற்காலத்தை நோக்கிச் செல்கிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் உன்னதமான இடத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் மாதாமாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
யாருக்கெல்லாம் வழங்கப்படும்?
இந்தத் திட்டத்தின்கீழ் ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் படித்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
சான்றிதழ், பட்டயம், இளங்கலைப் பட்டம், தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்றவற்றில் சேருபவர்களுக்கு இது பொருந்தும்.
தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உண்டா?
அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் உதவித்தொகை அளிக்கப்படுமா என்பதுகுறித்து அரசு இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.