Bombay - Maniratnam : ஒரு சில படங்கள் என்டர்டெய்ன்மெண்ட் என்பதையும் கடந்து மனதில் ஆழமாக பதிந்து விடும். எத்தனை காலங்களை கடந்தாலும் அவை ஒரு அழுத்தமான உணர்வை ஒவ்வொரு முறையும் கடத்தி செல்லும். அப்படி தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று தான் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், ராஜீவ் மேனன் என மூன்று மாபெரும் கலைஞர்களின் கூட்டணியில் 1995ம் ஆண்டு வெளியான 'பம்பாய்' திரைப்படம். மணிரத்தனத்தின் அக்மார்க் படைப்பான இப்படம் வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 



அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மதவாத பிரச்சினைகள், மதம் கடந்த காதலை தைரியமாக கையில் எடுத்து மணிரத்தினம் இயக்கிய இப்படம் இன்று வரை பார்வையாளர்களை அதிகமாக பாதித்தது. அரவிந்தசாமி, மனிஷா கொய்ராலா இருவரும் அவர்களின் காதலால் கண்களின் மூலம் உயிருக்குள் புகுந்து ஆர்ப்பரித்தனர்.  ராஜீவ் மேனனின் கேமரா மும்பையின் தெருக்கள், அரபிக்கடலில் அழகு, நெல்லை மண்ணின் வாசம், கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு என அனைத்தையும் நேரடியாக படம்பிடித்து  அப்படியே கண்முன்னே நிறுத்தினார். 


மும்பையை சூறையாடிய மதவெறியர்களின் உண்மையான கதைக்குள் அரசியலையும் அன்பையும் சரியான கலவையாக்கி 'பம்பாய்' என்ற கற்பனை கதையை மனதை உறைய வைக்கும் கட்சிகளோடு மதப்பிரிவுகளையும் கடந்து காதல் மனங்களை ஒன்றிணைக்கும் என்பதை  படமாக்கி இன்று வரை அதை பேசவைக்கும் ஒரு படைப்பாக வழங்கி உள்ளார் மணிரத்னம். 



படம் வெளியான சமயம் படக்குழுவினர் ஏராளமான சர்ச்சைகளை சந்தித்தனர். மதம் மக்களின் ரத்தத்தில் ஊறி போய் இருந்ததால் படத்திற்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் வந்தன. அத்தனை எதிர்ப்புகளையும் துவம்சம் செய்து படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. 


முதலில் அரவிந்த்சாமி நடித்த சேகர் நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்த தேர்வானது நடிகர் விக்ரம். கால்ஷீட் பிரச்சினையால் அவருக்கு பதில் அந்த வாய்ப்பு அரவிந்த்சாமிக்கு சென்றது. இது அவரின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான டர்னிங் பாய்ண்ட். அதே போல மனிஷா கொய்ராலா என்ற பேரழகியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய படம். முதல் படத்திலேயே இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்ததால் தன்னுடைய திரையுலக கனவே முடிவுக்கு வந்து விடும் என எத்தனையோ பேர் பயமுறுத்தியும் அதை துணிச்சலாக கையில் எடுத்து வெற்றியும் பெற்றார். 


படத்தின் உயிர் நாடி அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய இசையால் உயிர் கொடுத்து இருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கண்ணாளனே, உயிரே, அந்த அரபிக் கடலோரம், குச்சி குச்சி ராக்கம்மா, பூவுக்கென்ன பூட்டு, மலரோடு மனம் இங்கு என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். மொத்தத்தில் மனதில் இன்றும் தாக்கத்தை ஏற்படுத்திய பம்பாய் திரைப்படம் மதத்தை கடந்து மனங்களை இணைய செய்வது தான் காதல் என்பதை உரக்க சொல்லிய படைப்பு.