திரைப்பட தயாரிப்பு செலவை குறைக்கும் விதமாக நடிகர் பிரஷாந்த், இயக்குநர் மணிரத்தினம் மற்றும் தியாகராஜன் இணைந்து  Honey flicks எனப்படும் புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் கூட எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யாத நிலையில் , பிறமொழி படங்களான கே.ஜி.எஃப் , புஷ்பா உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் , குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இது தமிழ் திரைத்துறையினருக்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.







 இந்த நிலையில் Honey flicks செயலி வெளியீட்டு நிகழ்ச்சியில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் மணிரத்தினம் “ இப்போ நிறைய  படங்கள் வெளிவருகிறது. வட இந்தியாவிலும் அமோக வரவேற்பு இருக்கிறது. அதனால்தான் அதிகம் பேசப்படுகிறது. இதற்கு முன்னதாக சந்திரலேகா என்னும் திரைப்படம்  வடநாட்டில் நல்ல வெற்றியை பதிவு செய்தது அப்போது யாரும் இந்த கேள்வியை கேட்கவே இல்லை. இதை யாராலும் தடுக்க முடியாது. ஹாலிவுட்டில் வெளியாகும் திரைப்படங்களை எல்லாம் டப் செய்து பார்க்கிறோம். கன்னட மொழியில் வெளியான படங்களை பார்த்தால் என்ன தப்பு. பெரிய படங்கள் பண்ணும் பொழுது, இன்னும் கொஞ்சம் கவனமா பண்ணனும் . பெரிய படங்களுக்கு அதிகம் செலவு பண்ணுறோம் . பண்ணுற செலவெல்லாம் திரையில் தெரிய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். அதுக்காகத்தான்  கஷ்டப்படுறோம். தமிழ் சினிமா தரம் ரொம்ப பெருசு. நிறைய இயக்குநர்கள் மிகவும் அருமையாக செயல்படுறாங்க. நிறைய புதுப்புது இயக்குநர்கள் வித்தியாசமான படைப்புகளை கொடுக்குறாங்க. தமிழ் சினிமா கவலை பட வேண்டாம். நிறைய திறமையான இயக்குநர்கள் இருக்காங்க. நான் அதை நினைத்து பெருமைப்படுறேன்.” என தெரிவித்துள்ளார் .