கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகை மீனா அளித்திருந்த நேர்காணல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலானது. அதில் அவர் பேசியவற்றுள் சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளோம்...


நடிகர் விஜயுடன் நடிக்காதது குறித்து நடிகை மீனாவிடம் கேட்ட போது அவர், `நடிகர் விஜயுடன் நடிக்கவில்லை என்று எப்போதும் வருத்தம் உண்டு. ஏன் நடிக்கவில்லை என்று எனக்கே தெரியவில்லை. அவருடன் 4 படங்கள் நடித்திருக்க வேண்டியதாக இருந்தது. இவை அனைத்திற்கும் தேதி பிரச்சினைகளே காரணம். அஜித்துடன் `வாலி’ மிஸ் ஆகியது.. மேலும் நிறைய திரைப்படங்களை இழந்திருக்கிறேன். ஒருபக்கம், எல்லா படங்களிலும் நம்மை விரும்புகிறார்களே என்று சந்தோஷமாக இருக்கும். மறுபக்கம் எல்லாவற்றையும் பண்ண முடியாத வருத்தம் இருந்தது. நான் அப்போது தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தேன். அப்போது தேதிகளை ஒதுக்குவதில் மிகப்பெரிய சிரமம் இருந்தது. மேலும் இந்தப் படம் தான் ஹிட்டாகும். இந்தப் படம் சுமாராக போகும் என்று எதையும் தீர்மானிக்க முடியாது. அதனை இப்போதும் செய்ய முடியாது. நாம் நடிக்கும் கதாபாத்திரங்களைச் சிறப்பாக செய்து கொடுப்பது மட்டுமே நம் பணி. அது ஹிட்டாவதோ, சுமாராக போவதோ, தோல்வி அடைவதோ நம் கையில் இல்லை’ எனக் கூறியுள்ளார்.  



தொடர்ந்து அவர், `வாய்ப்பு கிடைத்து நான் நடிக்காமல் ஹிட்டான திரைப்படங்கள் ஏராளமாக இருக்கின்றன. விஜயுடன் `ஃபிரண்ட்ஸ்’ நான் நடித்திருக்க வேண்டிய திரைப்படம். அதன் ஒரிஜினல் மலையாளத் திரைப்படத்தில் நான் தான் நடித்திருந்தேன். அப்போதும் தேதி பிரச்சினை காரணமாக, தமிழில் நடிக்க முடியவில்லை.’ என்றும் கூறியுள்ளார். 


தன் மகள் நைநிகா பற்றிய பேசிய நடிகை மீனா, ``தெறி’ படம் நடிக்கும் போதும், அது வெளியாகும் போதும் நைனிகாவுக்குத் திரைப்படங்கள் குறித்தோ, நடிப்பது குறித்தோ எதுவுமே தெரியவில்லை. தனது நண்பர்களிடம் கூட திரைப்படத்தில் நடிப்பது குறித்து அவர் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. படம் வெளியான பிறகு, அவரது நண்பர்களின் பெற்றோர் அவரிடம் வந்து `நல்லா பண்ணிருக்க!’ எனப் பாராட்டிய போது தான் அவருக்கு புரியத் தொடங்கியது. தற்போது அவர், `ஏய், நான் ஒரு நடிகை!’ எனப் பெருமையாக இருக்கிறார். அவருக்கு ஆர்வம் வரத் தொடங்கியிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் படிப்பு முக்கியம். என்னைப் பொருத்தவரையில் அவரது கல்வி ரொம்ப முக்கியம். எனவே அவர் கல்வியில் கவனம் செலுத்த நான் உதவி வருகிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் கல்வியைப் பாதிக்காமல் இருக்கும் பட்சத்தில் நான் அனுமதி தருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.