Thug Life:  35 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கமல்ஹாசன், மணிரத்னம் மெகா கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான்களான இவர்கள் மீண்டும் இணைந்துள்ள படத்திற்கு தக் லைப் என பெயரிடப்பட்டுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த 7ம் தேதி வெளியானது.
   ‘KH234’ என படம் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் படத்தின் தலைப்பு  அறிவிக்கப்பட்டது.

 

படத்திற்கு தக் லைப் என பெயரிடப்பட்டதால் ரசிகர்களிடையே இப்படம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.  இந்தப் படத்தில் ஏற்கெனவே நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க இணைந்துள்ளனர். படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்ஷேனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

 

தக் லைப் படத்தில் கமலுடன் நடிகர் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு முக்கிய கதாபாத்திரம் உள்ளது என கூறப்படுகிறது. ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். அதன் பிறகு சில படங்களில் நடித்து வந்த கவுதம் கார்த்திக் கடையாக 1947 என்ற படத்தில் நடித்திருந்தார். 






 

தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் கல்கி 2829ஏ.டி. படத்தில் கமல்ஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையே, மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளார். 

 

முன்னதாக வெளியான படத்தின் டீசரில், "என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன், நான் ஒரு கேங்ஸ்டர்" என செம்ம மிரட்டலாக மாஸ் காட்டி இருந்தார் கமல்ஹாசன். இதன்மூலம் தக் லைப் கேங்ஸ்டர் ஜானரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னத்துடன் மீண்டும் கவுதம் கார்த்திக் இணைந்துள்ளதால் அவருக்கும் மாஸ் காட்சிகள் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.