Cyclone Michaung: சென்னை வெள்ளத்தில் சிக்கிய விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கானை மீட்புக் குழுவினர் படகில் அழைத்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

சென்னையில் கடந்த 3ம் தேதி இரவு முதல் மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை தொடர்ந்தது. கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது கனமழை சூறைகாற்றுடன் கொட்டித் தீர்த்ததால், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழ்ந்ததால் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். உணவு, தண்ணீர், மின்வசதிகள் இல்லாமல் கடும் பாதிப்பிற்கு ஆளாகினர். 

 

நேற்றிரவு முதல் மழை குறைய தொடங்கியதால் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தனது வீடு முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதாகவும், மின் இணைப்பு, வைபை, செல்போன் சிக்னல் என எதுவும் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும், உதவி கேட்டு அழைப்பு விடுத்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். 

 

இந்த நிலையில் அவரது டிவிட்டர் பதிவை பார்த்ததும், விஷ்ணு விஷால் வீட்டிற்கு சென்ற மீட்பு படையிடனர், படகு மூலம் அவரை மீட்டு சென்றனர். விஷ்ணு விஷாலுடன் அதே படகில் அமீர்கானும் உடனிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக விஷ்ணு விஷால் பகிர்ந்த டிவிட்டர் பதிவில், ”உடனடியாக வந்து தங்களுக்கு உதவி செய்த தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு படையினருக்கு நன்றி என்றும், காரப்பாக்கப்பத்தில் மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும், 3 படகுகள் மீட்பு பணியில் இருப்பதாகவும், தமிழக அரசின் சிறந்த பணிக்கு வாழ்த்துகள்” என்றும் கூறியுள்ளார். 

 





இதனிடையே நடிகர் அமீர் கான் தனது தாயின் உடல்நலக்குறைவால் அவருக்கு சிகிச்சைக்காக சென்னையில் 2 மாதங்கள் தங்க வேண்டி இருப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதேபோன்று நடிகர் விஷால் தனது வீட்டில் மழைநீர் சூழ்ந்துள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து உதவி செய்ய வேண்டும் என்றும் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். நடிகர் ரோபோ ஷங்கர் பால் பாக்கெட் வாங்க சென்று, மழைநீரில் சிக்கி கொண்டதாகவும், இரும்பு தகரம் ஒன்று தனது காலை கிழித்ததாகவும் காயத்துடன் வீடியோ பதிவிட்டிருந்தார்.