தலைநகர் சென்னையையே புரட்டிப்போட்ட கனமழையால், பல்வேறு பகுதிகளில் தொலைதொடர்பு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் செல்போனில் அழைப்பு, இணைய வசதியில்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மரங்கள் முறிந்து விழுந்ததாலும் பலத்த காற்றாலும் மின்சார விநியோகம் தடைப்பட்டது. பல்வேறு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளத்தால், பாதுகாப்பு கருதியும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் முடிந்த பின்னர், மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது.
ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் சேவை பாதிப்பு
இதற்கிடையே தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகியவற்றின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் சேவை, நேற்று மாலையில் இருந்து சில பகுதிகளில் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது.
சிந்தாதிரிப் பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தலைமைச் செயலாளர் விளக்கம்
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "42 மணி நேரம் பெய்த மழையால் சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 மாதங்களில் பெய்யும் மழை 2 நாட்களில் பெய்துள்ளது. மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம் ஆகிய பகுதிகளில்தான் அதிக அளவு மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் விரைவில் இயல்பு நிலை திரும்ப தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களில் 70 சதவீத தொலைத்தொடர்பு சீரமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 சதவீத தொலைத்தொடர்பு சீரமைப்பு பணிகளும் முடிவடைந்து விரைவில் வழங்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி வருகிறோம் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.