பாகுபலி, கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது தொடர்பாக பிரபல இயக்குநர் மணிரத்னம் பேசியுள்ளார். 


இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் , “ இது ஒன்றும் புதிதல்ல. நிறையப் படங்கள் தற்போது வெளியாகின்றன. அவை வட இந்தியாவிலும் வெற்றி பெறுகின்றன. அதனால் அவை பேசப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு வெளியான  ‘சந்திரலேகா’ திரைப்படம் வட இந்தியாவில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதனால் இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டாம்.


என்ன தவறு?


வளர்ச்சி என்பது பாசிட்டிவான விஷயம். அதை யாராலும் தடுக்க முடியாது. ஹாலிவுட் படங்களை பார்க்கும் நாம், அதனை இங்கு டப் செய்கிறோம். அபபடி இருக்கையில், கன்னட சினிமாவை பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. நீங்கள் நல்ல படங்களை எடுக்கும் பட்சத்தில், அந்தப்படம் எங்கு வேண்டுமானலும் வெற்றி பெறும். இதனை சந்திரலேகாவும், ரோஜாவும் முன்னமே செய்திருக்கிறது. மக்கள் இது போன்ற படங்களை பார்க்க முன் வந்திருக்கிறார்கள். இயக்குநர் இதனையும் கருத்தில் கொண்டு படங்களை எடுக்க வேண்டும்.




தமிழ் சினிமாவின் தரம் 


தமிழ் சினிமாவின் தரம் அபாரமான ஒன்று. இங்கு இருக்கும் புத்திசாலியான இயக்குநர்கள் நல்ல படங்களை இயக்குகிறார்கள். நிறைய புதுமுக இயக்குநர்கள், தமிழ் சினிமாவின் புதிய கதவுகளை திறந்து வைத்துள்ளனர். அவர்களை நினைத்து எனக்கு பெருமையாக உள்ளது. நடிகருக்கான சம்பளம் என்பது அவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே நடக்கும் விஷயம்” என்று அவர் பேசியுள்ளார்.






மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் பிந்தைய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப்படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.