தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ள என்.ஜி.எஸ். சிவப்பிரகாசம் என்பவரின் கார் ஓட்டுநரும், உறவினரும், அதிமுகவை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் நல்லம்பள்ளி நோக்க சென்றுள்ளார். அப்பொழுது தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்து, ரஞ்சித்குமார் இருசக்கர வாகனத்தை உரசும் படியாக சென்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார், நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் பேருந்தை நிறுத்தி,  பேருந்திற்குள்ளயே ஏறி ஓட்டுநரை சரமாரியாக தாக்கி உள்ளார்.

 


 

அப்பொழுது நடத்துனர் மற்றும் பயணிகள் தடுத்தும் ஓயாமல் தாக்கி உள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் அச்சமடைந்து உள்ளனர். சில பெண்கள் அச்சத்தில் பேருந்தை விட்டு இறங்கி உள்ளனர். தொடர்ந்து பேருந்து ஓட்டுநரை, அதிமுகவை சேர்ந்த ரஞ்சித்குமார் அடித்து வெளுத்தும் வாங்கும் காட்சிகள், பேருந்தில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 



 

இதனை அடுத்து பேருந்து ஓட்டுநர்  அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுவிட்டதால் பயந்து போன அதிமுக நிர்வாகி ரஞ்சித்குமார், வேறு வழியில்லாமல் புகார் கொடுத்த டிரைவரிடம் தான் செய்ததது தவறு என்றும், தன்னை மன்னிக்குமாறு, ஓட்டநரிடம் மன்னிப்பு கேட்கவே, இரு தரப்பும் சமாதானமாக சென்றிருக்கின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு  அதிமுக நிர்வாகி ஒருவரை உள்கட்சி பூசலால், கார் ஏற்றி கொல்ல முயன்றதாக சரச்சையி்ல் சிக்கியவர் தான் இந்த ரஞ்சித். தற்போது தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.