Oscars 2024: ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிரபல மலையாள படமான ‘2018’ 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


உலக சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடைபெறுவது வழக்கம். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் நிலையில் நடப்பாண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல்,சிறந்த ஆவணப்பட பிரிவில்  The Elephant Whisperers படமும் விருது வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது. 


இதனிடையே அடுத்தாண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவுக்காக ஒவ்வொரு நாடும் தங்கள் திரையுலகின் சிறந்த படங்களை பரிந்துரை செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியா சார்பில் மலையாளத்தில் வெளியான’2018’ படம் அனுப்பப்பட்டுள்ளதாக கன்னட திரைப்பட இயக்குனர் கிரிஷ் காசரவல்லி தலைமையிலான நடுவர் குழு அறிவித்துள்ளது. பரிந்துரை பட்டியலில் இடம் பெறும் படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருதுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மலையாளத்தில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5 ஆம் தேதி வெளியான படம் “2018”. இப்படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், கலையரசன், நரேன், அபர்ணா பாலமுரளி, லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.  நோபின் பால் இப்படத்துக்கு இசையமைத்த நிலையில் படமானது தியேட்டரில் வெளியானது. 018 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு 2018 படம் எடுக்கப்பட்டிருந்தது.


அந்த மழை வெள்ளம் ஏற்பட்ட காரணத்தையும் மக்கள் எப்படி ஒற்றுமையாக எதிர்கொண்டனர் என்பதையும் தத்ரூபமாக அப்படம் விளக்கியிருந்தது. கேரளாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிய 2018 படம் கிட்டதட்ட ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது. இப்படம் ஜூன் 7 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படிப்பட்ட பெருமைகளை கொண்ட 2018 படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


இதனிடையே 2018 படம் ஆஸ்கருக்கு செல்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அப்படத்தின் நடிகர் டொவினோ தாமஸ், “ஒவ்வொரு முறை விழும்போதும் எழுந்து நிற்பதில் தான் கேரளாவின் சிறப்பு உள்ளது. 2018 ஆம் ஆண்டு நம்மை தாக்கிய பெருவெள்ளத்தால் கேரளா வீழத் தொடங்கியது. ஆனால் நாம் எத்தகைய மன உறுதி கொண்டவர்கள் என்பதை ஒட்டுமொத்த உலகிற்கு காட்டினோம்” என தெரிவித்துள்ளார்.