தன் முதல் படம் வெளியாகவிருந்த நிலையில், மலையாள இயக்குநர் பைஜு பரவூர் (வயது 42) உயிரழந்தது கேரளத் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 45 படங்களில் புரொடக்‌ஷன் கன்ட்ரோலராக பணியாற்றியவர் இயக்குநர் பைஜு பரவூர். பல படங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற பின்னர், தன் முதல் படமான ‘சீக்ரெட்ஸ்’ எனும் திரைபடத்தை முன்னதாக பைஜூ எடுத்து முடித்துள்ளார். இந்தப் படத்தின்  போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இச்சூழலில் தன் முதல் படம் வெளியாவதற்கு முன்னரே, ஃபுட் பாய்சன் காரணமாக பைஜூ பரவூர் நேற்று உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சென்ற வாரம் ஜூன் 24ஆம் தேதி கோழிக்கோட்டில் உள்ள ஒரு  உணவகத்தில் திரைப்படம் தொடர்பான கலந்துரையாடலுக்குச் சென்றிருந்த பைஜு, அங்கு உணவு சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.


தொடர்ந்து வீடு திரும்பிய பைஜூவுக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்றதை அடுத்து குன்னகுளத்தில் உள்ள தன் மனைவி வீட்டுக்குச் சென்றுள்ளார்.  அங்கு உள்ளூர் மருத்துவமனையில் பைஜூ சிகிச்சைப் பெற்று அடுத்த நாள் (ஜூன்.25)  பரவூரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார் பைஜூ.


ஆனால் தொடர்ந்து உடல்நிலை மோசமடையவே, கொச்சியில் உள்ள மருத்துவமனைக்கு பைஜூ அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஜூன்.26ஆம் தேதி காலை பைஜூ உயிரிழந்தார். இந்நிலையில், கோழிக்கோட்டில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட உணவால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதே இதற்குக் காரணம் என பைஜூவின் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


பைஜூவுக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், இவரது இறுதி காரியங்கள் ஜூன்.26ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கேரள திரைத்துறையில் பணியாற்றி, தன் முதல் படத்தை எடுத்து முடித்து அப்படம் வெளியாவதற்கு முன்பே பைஜூ உயிரிழந்துள்ளது மலையாளத் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.